இந்தியாவில் பாஸ்போர்ட் அச்சடிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது நேபாளம்!

 

 இயந்திரம் மூலம் படித்தறியக் கூடிய பாஸ்போர்ட்டை இந்திய அச்சகம் ஒன்றில் அச்சடித்துப் பெறும் ஒப்பந்தத்தை நேபாள அரசு ரத்து செய்தது.

இந்திய செக்யூரிட்டி அச்சகம் ஒன்றில் பாஸ்போர்ட் அச்சடிக்கும் முடிவை வாபஸ் பெறுவது என அரசு முடிவுசெய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சரும், அரசு செய்தித்தொடர்பாளருமான ஷங்கர் போஹரல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை விநியோகிப்பதை நிறுத்துமாறு சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு கேட்டுக்கொண்டதையடுத்து புதிய நவீன பாஸ்போர்ட்டுகளை விரைவில் அச்சடித்துப் பெற இந்திய செக்யூரிட்டி அச்சகத்துடன் நேபாள அரசு சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது.

நேபாள அரசின் இம்முடிவை எதிர்த்து இன்று பொதுவேலைநிறுத்தம் செய்ய மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். மாவோயிஸ்டுகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்தியாவில் பாஸ்போர்ட்டுகள் அச்சடிக்கும் முடிவை நேபாள அரசு திரும்பப் பெற்றுவிட்டதால் மாவோயிஸ்டுகளும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

முன்னதாக இந்தியாவில் பாஸ்போர்ட்டுகள் அச்சடிக்கும் ஒப்பந்தத்துக்கு நேபாள உச்சநீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.