இந்தியாவில் திருமண உதவித் திட்டம் தொடர்பில் பெண்களை இழிவுபடுத்தும் அரசு.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், அரசின் திருமண உதவித் திட்டத்தைப் பெறும் பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்படுவது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் மாநில அரசிடம் விளக்கம் கேட்க உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஏழைப் பெண்களுக்காக இலவச திருமண உதவித் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக அமல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலானவர்கள், பழங்குடியினப் பெண்கள்.

இலவச திருமணத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், குறிப்பிட்ட தினத்தில் அரசு குறிப்பிடும் இடத்தில் கூட வேண்டும். அப்போது ஏராளமான ஜோடிகளுக்கு அங்கு திருமணம் நடக்கும். அதற்கு முன்னதாக, அந்தப் பெண்கள் வரிசையில் நின்று, பெண் மருத்துவரிடம் தங்கள் கன்னித்தன்மை குறித்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே, திருமணம் செய்துகொள்ள முடியும். 6500 ரூபாய் மதிப்புள்ள குடும்பத்துக்குத் தேவையான பொருள்களும் அரசிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும்.

அதன்படி, ஷதோர் நகரில் அவ்வாறான இலவச திருமணத்துக்காக கூடிய பெண்கள் அனைவரும் வரிசையில் நிறுத்தப்பட்டு, கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சோதனை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், அதற்கு பல பெண்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர். ஆனால், அதிகாரிகளின் வற்புறுத்தலால் அந்தப் பெண்கள் பரிசோதனைக்கு சம்மதி்த்ததாகக் கூறப்படுகிறது.