இந்தியாவில் ஏராளமான ஹிட்லர்கள் உள்ளனர்!:சத்தியா சிவராமன்

புதுடில்லியைச் சேர்ந்த ஊடகவியலாளர் சத்தியா சிவராமன் 06- 09- 09 அன்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை. தமிழில் பஷீர்.
 

நண்பர்களே! தோழர்களே!

satyaஇலங்கையில் முப்பதாண்டு காலமாக நடந்துவரும் இன மோதல்களிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளைப்பற்றி பேசும் முன்னர் இந்தியாவின் தவறுகளைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தெற்காசியாவில் பெரியதும் , பண்டைய நாடாகவும் இந்தியா உள்ளது என்பதால் இப்பிராந்தியம் பற்றி நாம் இன்னும் அழுத்தமாகப் புரிந்து கொள்ள இது உதவும்.

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பற்றி பேசும் முன்னர், பொது சுகாதாரம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. ஏனெனில் நாம் வாழும் சமூகத்தின் உண்மையான பண்பாட்டு விழுமியங்களின் முக்கியமான குறிகாட்டியாக அது விளங்குகின்றது.இந்நாட்களில் நம் நாட்டு மக்கள் முகமூடிகளுடன் திரிவது ஒரு பொதுவான காட்சியாக உள்ளது. பன்றிகாய்ச்சல் கிருமித் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு திரிவதாகக் கூறப்பட்டது.

நடுத்தர வர்க்க இந்தியர்கள் இவ்வாறாக முகத்தை மூடிக்கொண்டு அலைவது குறித்து உள்ளபடியே நான் மகிழ்வடைகின்றேன்.சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த முகமூடி என்ற துணிக்கேடயம் பயங்கரவாதிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிசாசுகளுக்கும் மட்டுமே உரிய தனித்த ஒன்றாகஇருந்தது.

 பயங்கரவாதிகளுக்கெதிராக முகத்தைமூட கட்டாயப்படுத்தப்பட்டவர்களுக் கெதிராக ஆண்டாண்டு காலமாக உண்டாக்கப்பட்டிருந்த பழங்கண்ணோட்டத்தை தகர்க்கும் எதிர் மனப்பதிவை உருவாக்கிட இன்று முகத்தை மூடும் மேன்மக்கள் உதவமுடியும். பட்டப்பகலில் முகமூடியணிந்து செல்வதென்பது இன்று அந்தஸ்துக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்நாட்டின் நடுத்தரவர்க்கத்து மக்கள் முடிந்தால் எப்போதுமே முகமூடி அணிந்திருப்பது நல்லது. ஏனெனில் தங்கள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக அவர்கள் மிக ஆழ்ந்த அவமானத்தைப் பெற வேண்டும். உண்மையிலேயே இவர்கள் யாவரும் பொது இடங்களில் முகத்தைக்காட்ட தகுதிபடைத்தவர்களல்ல.

 வறுமை நோய்கிருமிகள், ஒட்டுண்ணிகள், மிக மோசமாக ஓட்டப்படும் ஊர்திகள் போன்றவற்றினால் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையை கடந்தவாரம் திரட்டினேன். அதில் கிடைத்த தகவல்களின்படி,

ஊட்டச்சத்துக் குறைவினால் 2 மில்லியன் குழந்தைகள் வருடந்தோரும் மடிகின்றனர்.

மலேரியாவில் 90,000& க்கும் மேற்பட்டோர்,

வளிமண்டல மாசினால் 5,27,700 பேர்,

காசநோயினால் 40,000 பேர்,

சாலை விபத்தினால் 10,000& க்கும் மேற்பட்டோர்,

உயிர் இழக்கின்றனர், உயிரைக்குடிக்கும் இந்த தவிர்க்கக்கூடிய காரணிகள் மூலம் தினசரி 12,000 இந்தியர்கள் இறக்கின்றனர். ஆனால் தொற்று நோயான பன்றிக்காய்ச்சல் மூலம் கடந்த இரு மாங்களில் இறந்ததோர் எண்ணிக்கை 100 அளவில் மட்டுமே. தினசாரி சாகும் 12, 000 இந்தியர்கள் ஒவ்வொருவரின் பிரச்சனைகளையும் நமது தினசரி செய்தித்தாள்களின் முகப்புச் செய்தியாகவும் இது நமது தொலைக்காட்சிகளின் முதன்மைச் செய்தியாகவும் வெளியிட்டால் ஒளிந்துக் கொள்வதற்கு யாருக்கும் இடமிருக்காது.

சகல வசதிகளையும் துய்க்கும் இந்தியர்கள் நிரந்தரமாக தங்கள் வாழ்நாள் முழுவதும் முகமூடி அணிந்தால் நல்லது என நான் சொல்வது ஏன்? என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். வறுமையிலும், அலட்சியத்திலுமாக வருடந்தோரும் மில்லியன் கணக்கில் மக்கள் மௌன இனப்படுகொலை செய்யப்படும் உலகின் ஒரு அங்கமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவை எதுவும் பொதுமக்களின் மனசாட்சியைத் தொடுவதே இல்லை.

காலங்காலமாக தங்களிடையே நடைபெறும் மௌனமான புலப்படாத இனப்படுகொலையை ஏற்கும் விருப்பமுடைய ஒரு மக்கள் திரளானது, ஆரவாரமிக்க புலப்படும் ஒரு இன அழித் தொழிப்பு நடக்கும் போது அதையும் ஏற்கவே செய்யும்.வறுமை, பிணி, குழுமோதல் என எண்ணிறந்த மக்கள் ஓசையின்றி உயிரிழக்க அனுமதிக்கப்படுவதென்பது உலகில் தென்னாசியாவில் மட்டுமே நடக்கும் அன்றாட நிகழ்வாகும். இந்த துயர் வேறெங்காவது நடந்திருந்தால் புரட்சி வெடித்திருக்கும்.சில காலங்களாக சிறீலங்காவில் நடைபெறும் தமிழர்களின் இனப் படுகொலையானது தெற்காசியாவில் உள்ள ஆளும் வர்க்கத்தினர் மனித உயிர்கள் மீது காட்டும் பெறுமதியற்ற போக்கினால்தான் தொடருகின்றன.

தாழ்ந்த மனிதத்திரளான- மத, இன சிறுபான்மையினர் , விளிம்புநிலை பண்பாட்டினர், வறியோர் என்போரின் வாழ்வின் மீது நமது மேன்மக்கள் காட்டும் அவமாரியாதைக்கு இத்துணைகண்டத்தின் மக்கள் சமூக அரசியல் புரட்சியைக் கொண்டு விடையளிக்க வேண்டும் என்பதே நாம் பெற வேண்டிய முதல் படிப்பினை. தெற்காசியா சந்தித்து வரும் வறுமை, மோதல் அல்லது வறுமையினால் உண்டாகும் மோதல் போன்றவை தலைகீழ் மாற்றத்தின் கீழ் தீர்க்கப்படும்.உண்மையான புரட்சிகர மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக உழைக்கத் தவறுவதென்பது சிறீலங்காவில் நாம் கண்டதைப் போன்ற இனப்படுகொலைகளையே மேன்மேலும் கொண்டு வரும்.

இந்தியா போன்ற நாடுகளில் ஓரளவேனும்ம் இருப்பதாக சொல்லப்படுகின்ற சனநாயகம் கூட தவறிப் போன ஒன்றுதான். இங்குள்ள அரசியல்வாதிகள் ஒன்றும் சனநாயக விழுமியங்களிலும் , கோட்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டவர்களல்ல. வேறு வழியில்லாததால் அவர்கள் அதைப்பின்பற்றுகின்றார்கள்.

Hitler-0011இந்தியாவில் ஹிட்லர் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. காரணம் இங்கு ஏராளமான ஹிட்லர்கள் உள்ளனர். ஒருவர் மற்றவரை மேலாதிக்கம் பண்ணுமளவுக்கு வலுவானவர்களாக, பல தோற்றமும், வடிவமும், அளவும், நிறமும், கொண்ட பல் வேறு மொழிகளைக் கொண்ட ஹிட்லர்கள் போட்டியிடும் களமாக, இந்த உலகின் மிகப்பெரிய திறந்த சந்தை சனநாயகம் நடைமுறையிலுள்ளது. எப்பேர்ப்பட்ட எத்தகையவர்களாக இருந்தாலும், இந்த ஹிட்லர்கள் ஒவ்வொருவரையும் எதிர்த்து போரிடுவது நமது பணியாகும். இத்தகைய போராட்டம் மூலம் இனி எம்மட்டத்திலும் ஹிட்லர்கள் உருவாகும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இலங்கை மோதல்களில் நாம் பெற வேண்டிய இரண்டாவது படிப்பினை என்னவெனில் இது சிறீலங்காவின் பிரச்சனையாக சுருக்கிப்பார்க்கப்படக் கூடாது. மாறாக உலகளவில் இல்லாவிட்டாலும் கூட முழு தெற்காசியா துணைக் கண்டத்தின் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்.

இந்தியா, சீனா, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தமிழ்ப் புலி கிளர்ச்சியாளார்களுக்கெதிராக இலங்கை ராணுவத்திற்கு உதவிடுவதால் இப்பிரச்சனையை இலங்கை மோதல் என இனியும் குறிப்பிடுவது சாரியல்ல, தனி ஈழத்திற்கான இயக்கத்தை இத்தனை வருடங்களாக ஆதரித்து, வந்த தமிழ் சிதறல் சமூகம் 4 கண்டங்களிலும் 10 நாடுகளிலுமாக பரந்து வாழ்கின்றனர். எனவே பன்னாட்டு மனித உரிமை குழுக்களைப் பார்த்து சிறீலங்கா மோதலிலிருந்தும் விலகியிருங்கள் என மஹிந்த ராஜபச்ஷே கூறியதைப் பார்க்கும் போது ஒருவருக்கு நகைக்கத்தான் தோன்றும்.

வெளிநாட்டு அரசுகளிடமிருந்து தொடர்ந்து உதவிகளை கோரியதன் வாயிலாக உள்நாட்டு பூசலை தொடச்சியாக வந்த இலங்கை அரசுகள் உலகப் பிரச்சனையாக ஆக்கி வந்துள்ளன. 1971ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசை ஜே.வி.பி  இயக்கத்தினர் கவிழ்ப்போம் என மிரட்டியபோது இந்தியகடற்படையும், பாக்கிஸ்தானிய வான்படையும் தான் இலங்கை அரசைக் காப்பாற்றின.வழமையாக தங்களுக்குள் எதிரிகளாக உள்ள அந்நிய நாடுகள் கொழும்பில் உள்ள ஆட்சியாளர்களின் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதில் மட்டும் இலங்கை அரசுக்கு ஒன்றுபட்டு உதவியே வந்துள்ளன என்பது சுவாரசியமான விடயம்தான். சமீபத்தில் கூட ராஜபக்ஷே அரசிற்கு இந்திய, பாக்கிஸ்தானிய, சீன, ரஷிய, இஸ்ரேலிய அரசுகள் உதவியதென்பது இப்போக்கிற்கு சாட்சியாகும்.

மூன்றாவது படிப்பினை என்னவென்றால், சிறீலங்கா மோதலில் தொடர்புடைய அனைத்து நாடுகளிலுள்ள மக்களும் தங்களின் அரசிற்கெதிராக ஒன்றுபட வேண்டும். குடிமக்களுக்கெதிராக அரசுகள் ஒன்றுபடும் போது அவ்வரசுகளுக்கெதிராக மக்களும் ஒன்றுபடவியலும். குறிப்பாகச் சொல்வதெனில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் கஷ்மீரில், இந்தியாவின்வடகிழக்கு, திபெத், பலூசிஸ்தான் செசன்யா, பாலஸ்தீன் போன்ற விடங்களில் நடைபெறும் மக்களின் போராட்டத்திற்கு தங்களின் ஐக்கியத்தை தெரிவிக்க வேண்டும்.

 ஒடுக்குகின்ற உள்நாட்டு காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலைக்கான அல்லது தன்னாட்சிக்கான அவர்களின் போராட்டங்களில் பொதுவான பல அம்சங்கள் உள்ளன. இத்தகைய ஐக்கியமொன்று ஏற்படுவதென்பது அவ்வளவு கடினமானதாக இருக்கக்கூடாது. அத்தகையதொரு ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் போராட்டமானது உண்மையிலேயே பன்னாட்டு மயப்படும். அத்தகையதொரு அய்க்கியத்தின் மூலமே உலகின் பல நாடுகளில் உள்ள சிறுபான்மை குழுக்களின் தன்னாட்சிக்கான உரிமையைக் கோட்பாட்டை பொருள் செறிந்ததாக ஆக்க முடியும்.

தன்னாட்சிக்கான உரிமை என்பதை முழுமுதல் உரிமை என்பதுடன் நம் சமகால பன்னாட்டு அரசியலில் மிகஉயர்ந்த சனநாயகக் கோட்பாடாகவும் நான் கருதுகின்றேன். மகிழ்ச்சியற்ற வன்முறை வாழ்வில் மணமுறிவுதான் எப்போதுமே ஏற்றத் தீர்வாகும். நாட்டை விட்டு அகலும் முன்னராக பிரித்தானியா 60 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் சிங்களவருக்கும், தமிழருக்கும் வலுக்கட்டாய திருமணம் செய்வித்தனர். தங்களின் தலைவிதியை தேர்வு செய்யும் அடிப்படை உரிமையான வாக்கெடுப்பு முறையை இலங்கைத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும். அமைதியான சனநாயக முறையில் அவர்கள் தங்களுக்கு வேண்டியதை முடிவு செய்துக் கொள்ளட்டும். அதே நேரத்தில் ஒரு அமைப்பிலிருந்து விலகும் விடுதலைப்பெற்ற இனமானது பரந்துபட்ட வலுவான சனநாயகக் கூட்டமைப் பொன்றினுள் அங்கமாக வேண்டுமென்பதில்லை.

எனது கருத்தின்படி தெற்காசிய துணைக்கண்டத்தினுள் நடைபெறும் இன, மொழி, பிற சிறுபான்மையினரின் போராட்டமானது. தங்களின் தன்னாதிக்க உரிமைக் கோரலுடன் கூடவே தெற்காசிய அளவிலான சனநாயகக் கூட்டமைப்பிற்காகவும் அமைய வேண்டும். பிரிதலும், இணைதலும் கையோடு நடைபெறவேண்டும். இதற்கான தலையாய காரணம் என்னவெனில் உலகெங்கிலும் பார்க்கும் போது எதிர்கால அரசியல் தனித்த தேசிய அரசின் அடிப்படையில் அமையாது என்பதே.

உலகப் பொருளாதாரப் பருண்மைகள், மூலதனக் குவிப்பு, பன்னாட்டு நிறுவன செயல்பாடுகளென்பன தேசீய அரசை தேவையற்றதாக ஆக்கியுள்ளன. பன்னாட்டு கழகங்களிடமிருந்து இப்பகுதியில் நாம் படிப்பினைப் பெற வேண்டும். வணிக நோக்கங்களற்ற பன்னாட்டு துணைக்கண்டமாக நாம் மாற வேண்டும். தங்களை ஆள்வோருக்கு எதிரான போராட்டங்களும், பொதுவான இலக்குகளுமே அதன் மக்கள் திரளைக் கட்டுப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.

 எனவே நாம் நமது தனித் தன்மைக்காகவும், தேசீய அரசொன்றிற்காகவும் போராடும் அதே வேளை உலகின் மாறி வரும் பருண்மைகளையும், பொருளாதார பகாசுர சக்திகளையும், குடிபெயர்வு, புவிவெப்பமயமாதல் போன்றவற்றினால் ஏற்படுத்தப்படும் புதிய அடையாளங்களையும் அவதானிக்க வேண்டும்.

war33இலங்கை மோதலிலிருந்து நாம் பெற வேண்டிய நான்காம் படிப்பினை என்னவென்றால் ஒரு போராட்டத்தின் ராணுவத்தன்மை என்பது துவக்குகளின் வெடியோசை, குணடு வெடிப்புகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்பட முடியாதென்பதே. தென்னாசியாவில் மட்டுமல்ல உலகெங்கிலுமே அரசியல் சமூக இயக்கங்களில் வன்முறை, சாத்வீகம் என்பனவற்றின் பயன்பாடு குறித்து நெடியதொரு விவாதம் நடந்துவருகின்றது. வன்முறை, சாத்வீகம் குறித்து எண்ணற்ற விவாதங்கள் நடந்து வருகின்ற போதிலும் அதுகுறிதத தெளிவே எங்கும் தென்படுகின்றது. நாம் நினைப்பது போல இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல. ஏனெனில் இவ்விரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. நாம் வாழும் உலகில் ‘வன்முறை’ முடிவதெங்கே? ‘சாத்வீகம்’ தொடங்குவதெங்கே? என்பது உண்மையில் யாருக்குத் தெரியும்?

எனவே இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது ‘குருதி வன்முறை’ குருதியற்ற வன்முறை’ என வகைப்படுத்துவதே சாலப் பொருத்தமாக இருக்கும். தற்போதைய தெற்காசிய சமூக அரசியல் சூழலில் குருதியற்ற வன்முறைதான் பொருத்தமான வழிமுறையாக இருக்கும். அதீத ஆற்றலை பயன்படுத்தாதவரை துணைக் கண்டத்தின் ஆளும்வர்க்கம் அவ்வளவு எளிதாக தனது ஆட்சியை விட்டுக்கொடுக்காது. அதுமாதிரி சந்தர்ப்பங்களில் குருதி சிந்தும் வன்முறை ஏற்படும். அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். அத்தகைய ஒரு சூழ்நிலையை முன்கூட்டியே புரிந்துக் கொள்ளவும் முடியும். ஆனால், மக்கள் திரள் போராட்டங்களில் துவக்கும், வெடிகுண்டும், நடுநாயகமாக விளங்கும் செயற்கையான முன்தாக்குதலுக்கு இடமிருக்க முடியாது.

ஆட்சியதிகாரம் என்பது வெறுமனே அரசியல், நிர்வாகத்தன்மை வாய்ந்தது மட்டுமன்று. அது சமூகப் பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதும் கூட. இத்தகையதொரு ஆட்சி அதிகாரத்தை வெறும் அதீத வன்முறை கொண்டு எளிதாக கைப்பற்றிவிட முடியாது. ஒரு நாட்டையோ சமூகத்தையோ நிர்வகிப்பதற்கு ராணுவ நுட்பங்களோடு மேலும் பல திறன் நுட்பங்களும் தேவை.

இறுதியான தலையாய படிப்பினை என்னவெனில், இலங்கைத்தமிழர்களுக்காக நாம் புவியளாவிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதில் மக்கள் மிக எளிதாக பங்கேற்கும் வகையிலான மெய்யான சனநாயகத்தன்னை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.மஹிந்த ராஜபக்ஸே தலைமையிலான அரசை உடனடியாக பாதிக்கும் விடயம் என்னவெனில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை சுற்றுலாவை புறக்கணிப்பதுதான். கொழும்பை தற்போது ஆளும் போலீஸ்க் குற்றவாளிகளை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் இதுபோன்ற பல வழிமுறைகளை ஆக்கப்பூர்வமான அமைதியான முறையில் மேற்கொள்ளும் போது நமது லட்சியம் நிறைவேறும்.

கடந்த முப்பதாண்டுகளாக குறிப்பாக கடந்த ஆண்டு இந்திய அதிகார வர்க்கத்தினர் இலங்கையில் செய்தவற்றை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்படி நாம் கோர வேண்டும். தொடர்ச்சியாக வந்த இந்திய அரசுகள், அரசியல்வாதிகள், அலுவலர்கள் இலங்கை மோதலில் மிகவும் எதிர்மறையானவற்றையே செய்து வந்திருக்கின்றனர்.நம்மனைவரின் பெயராலும் இவர்கள் நம் அண்டை நாட்டில் செய்தவற்றிற்கு இவர்கள் இந்திய மக்களிடம் விடை சொல்ல வேண்டும். இவர்களின் பன்னாட்டுக் குற்றத்திற்காக இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் அதே போலதொரு விஷமத்தை இந்தியக் குடிமக்களிடமும் செய்ய தயங்க மாட்டார்கள்.

தமிழகச்சூழலில் இலங்கைத்தமிழர்களுக்கான பரந்துபட்ட ஆதரவை குறிப்பாக உணரும் வகையிலும் வெளிப்படுத்த வேண்டும். வெறும் நாவன்மைகளுக்கு இனி வேலையில்லை. எடுத்துக்காட்டாக கடந்த இருபதாண்டுகளாக இம்மாநிலத்திற்கு வரும் இலங்கைத்தமிழர்களுக்கு பன்னாட்டுச் சட்டத்தின்படி ஏதிலியருக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடையாது. ஏதிலியருக்கான ஐ.நா. அவையின் உடன்படிக்கையில் கையெழுத்திட இந்திய அரசு மறுத்து விட்டது. இதன் மூலம் வேண்டாத உறவைச் சார்ந்த அழையா விருந்தாளிகளை நடத்துவதைப் போல நடத்துகிறது. வாழமுடியாத புகலிடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வியும் மறுக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக அவர்கள் ஆண்கள் விருப்பம் போல விசாரணை என்ற பெயரில் தடுத்துவைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அகதிகளுக்கான ஐ.நா. உடன்படிக்கையில் இந்தியா உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்பனவற்றை நாம் கோருவதற்கான நேரமிது.இலங்கைத்தமிழர்களின் உரிமைகளுக்காக நாம், போராடும் அதே வேளை தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களுக்காகவும் போராட வேண்டும். இம்மாநிலத்தில் பிரச்சனைகளுக்கா பஞ்சம்? சுகாதாரம், கல்வி, பெண்கள், தலித்துகளின் கல்வி, வேலைவாய்ப்பு என எவ்வளவோ உள்ளது உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அரசுகளுக்கும் எதிராக நாம் அறை கூவல் விடுக்காத நிலையில் அந்நிய மண்ணில் மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்க நம்மால் உண்மையிலேயே செய்ய முடியாது.

geno107இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல மஹிந்த ராஜபக்ஷேவின் அரசை எதிர்த்த சிங்களவர்களை பெருந்திரளாக கொன்றொழித்தவர்களை நீதியின் முன் நிறுத்த பன்னாட்டு அளவிலான நடவடிக்கைத் தேவைப்படுகின்றது. எதிர்ப்பாளர்களையும் அதிருப்தியாளர்களையும் கையாளும் இலங்கை முன்மாதிரிதான் தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள அரசுகளுக்கு விருப்பமான ஒன்றாக உருவெடுத்து வருகின்றனது. சட்டத்திறகு அப்பாற்பட்டு நிற்கும் அவர்களின் இப்போக்கு காரணமாக நமது பிராந்தியத்தில் இலட்சகணக்கானோர் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. போலீஸ் குற்றங்களையும், இனஅழித் தொழிப்பையும் நிகழ்த்தியவர்களுக்கெதிராக தேசிய, பன்னாட்டளாவிலான இயக்கம் நடத்தி அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இலங்கைத்தமிழர்களின் நீதிக்கான போராட்டம் இலங்கைத்தமிழர்களுடையது மட்டுமல்ல அது நம் அனைவரினதும், நமது உயிரானதும், நமது உரிமைகளினதும், நமது சனநாயகத்தினதும், நமது எதிர்காலத்திற்கானதுமாகும்.

Published on: Oct 18, 2009 @ 18:00

 

One thought on “இந்தியாவில் ஏராளமான ஹிட்லர்கள் உள்ளனர்!:சத்தியா சிவராமன்”

Comments are closed.