இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம் : மனோகரன்

ஈழத்துரோகிகளையும் எடுபிடிகளையும் கொண்டு, தமிழின அடையாளத்தையே அழித்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கிறது ராஜபக்சே கும்பல். இலங்கையில் ஈழத் தமிழினத்தை நரவேட்டையாடிய இனவெறி பயங்கரவாத ராஐபக்ச கும்பல், போருக்குப் பின்னர் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தையும் இராணுவ பலத்தையும் கொண்டு பாசிசத் திமிரோடு கொட்டமடித்து வருகிறது. முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், முகாம்களில் இருந்தவர்கள் அவரவர் ஊர்களுக்கு அருகில் மீண்டும் முகாம்களில்தான் வைக்கப்பட்டுள்ளார்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறித் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அந்த இடங்கில் நிரந்தர இராணுவ முகாம்களும் ஒரு லட்சம் இராணுவத்தினர் குடும்பத்துடன் தங்க வீடுகளும் அதிவேகமாக அமைக்கப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் நான்கு லட்சம் சிங்களர்கள் குடியேறவுள்ளனர். தமிழர் பகுதிகளை இராணுவமயமாக்கி, தமிழர்களை மேலும் சிறுபான்மையாக்குவதுதான் இலங்கை அரசின் திட்டமாக உள்ளது.

இத்தனையும் போதாதென்று, இப்போது அரசியல் ரீதியாகவும் துரோகிகளையும் எடுபிடிகளையும் கொண்டு ஈழத் தமிழனத்தைப் பிளவுபடுத்தி தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள ராஜபக்ச கும்பல் முயற்சித்து வருகிறது. ஈழப் போரைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளரான குமரன் பத்மநாதன் என்கிற கே.பி., இலங்கை அரசுடன் இணைந்து உல்லாசமாகவும் பாதுகாப்பாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தடுப்பு முகாம்களில் உள்ள சில விடுதலைப் புலிப் போராளிகளையும், விடுவிக்கப்பட்ட சில அரசியல் பிரிவு போராளிகளையும் இணைத்து வடபகுதி அரசியலில் கே.பி.யை ஈடுபடுத்த இலங்கை அரசு முனைப்பு காட்டி வருகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலருடன் சேர்ந்து வடக்கு-கிழக்கின் மறுவாழ்வுக்கும் மேம்பாட்டுக்கும் கே.பி. உதவப் போகிறார் என்று அரசே அறிவித்துள்ளது. அதன்படியே, அண்மையில் கே.பி. மலேசியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இப்போது கே.பி.யை முதலமைச்சருக்கான வேட்பாளராக நியமிக்கப்போவதாக அரசு அறிவித்திருப்பதால், வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரசாங்க ஆதரவுடன் முதலமைச்சருக்கான வேட்பாளராகக் களம் இறங்கத் திட்டமிட்டிருந்த இலங்கை அரசின் கைக்கூலியான டக்ளஸ், நெருக்கடியில் உள்ளார். இதனால் அவர் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி, ஆனந்த சங்கரி, ஈரோஸ், சிவாஜிலிங்கம் அணி உள்ளிட்ட 7 குழுக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு களமிறங்க முயற்சித்து வருகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றிபெறும் இடங்களைவிட, டக்ளஸ் அணியும் கே.பி. அணியும் தனித்தனியே போட்டியிட்டு பெறும் மொத்த இடங்கள் அதிகமாக இருந்தால், வடமாகாண சபையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று ராஜபக்ச கும்பல் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. புலிகள் இயக்கத்தின் மற்றொரு பிளவுபட்ட குழுவினர், அரசு தந்திர ரீதியாக இந்தியாவுக்கு நிர்ப்பந்தங்கள் தருவதன் மூலம் இந்திய ஆதரவுடன் தமிழீழ அரசை நிறுவ முயற்சிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தின் இணைப்பாளரான உருத்திர குமாரன்,”இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையும்போது தமிழீழத் தனியரசுக்கான ஆதரவினை நாம் இந்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியும். இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வருவதற்கான வாப்புகள் உண்டு என்றே நாங்கள் கருதுகிறோம்” என்கிறார். இது ஒருபுறமிருக்க, அண்மையில் இலங்கை அதிபர் ராஜபக்ச டெல்லிக்கு வந்து இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இலங்கை இராணுவத்தை வலுப்படுத்தவும் பயிற்சி அளிக்கவும் உதவி வரும் இந்தியா, மறுபுறம் ஈழத் தமிழர் மீள் குடியேற்றத்துக்காக 50,000 வீடுகள் கட்டியமைக்கவும், தலைமன்னாரிலிருந்து ரயில் பாதை அமைக்கவும் சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கவும் கடனுதவி செய்ய இசைந்துள்ளதோடு, இலங்கையில் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக்கி, இந்தியாவில் உள்ளது போல அத்தமிழ் மாநிலத்துக்கு அதிகாரங்களை வழங்கக் கோருகிறது. இதற்கேற்ப அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு ஒன்றை வகுக்க தமிழ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ராஜபக்சே அறிவித்துள்ளார்.

புலிகளுக்கும் ஈழத் தமிழனத்திற்கும் எதிரான போரில் துணைநின்று வழிகாட்டி இயக்கியதோடு, ராஜபக்ச கும்பலின் பாசிச ஆட்சிக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, இலங்கை அரசியலிலும் தலையிட்டு, இலங்கை மீது தனது அரசியல் ஆதிக்கத்தை இந்தியா வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தியாவின் உறுதியான ஆதரவினால்தான் போர்க்குற்ற விசாரணைக்கான ஐ.நா. சபையின் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்து ராஜபக்ச அரசு கூச்சலிடுகிறது. மறுபுறம், முன்னாள் புலி ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கையறு நிலையில் தவிக்கின்றனர்.

இந்திய மேலாதிக்க அரசின் தயவை நாடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு போக்கிடமில்லாத பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பந்தன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று மன்மோகன் சிங், ப.சிதம்பரம், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உட்பட பலரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்திய அரசுடன் பேசுவது போல, இலங்கை அரசுடனும் தொடர்ந்து பேசுங்கள் என்று டெல்லி அவர்களிடம் கட்டளையிட்டுள்ளது. அதன்படியே, 13-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின் அடிப்படையிலான மாதிரி அரசிலமைப்பு தொடர்பாக இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து இக்குழுவினர் கருணாநிதியையும் சந்தித்தனர். ஆனால், கருணாநிதி அவர்களிடம் கறார் குரலெழுப்பினாராம். கோபாலபுரத்தில் வெளிபட்ட வார்த்தைகள் இந்திய மேலாதிக்க நலன்களுக்கேற்ப கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்தனவாம். “எட்டி எட்டி உதைக்கிற காலைக்கூட இறுக்கமாகப் பற்றிக் கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை என்று இலங்கைத் தமிழ்த் தலைவர் ஒருவர் சோல்வதுதான் இன்றைய பரிதாபகரமான யதார்த்தம்” என்று இச் சந்திப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறது, ஜூனியர் விகடன்.

இந்திய மேலாதிக்கமும் அதற்குத் துணைநின்று பக்கமேளம் வாசிக்கும் கருணாநிதியும் ஒருபுறமிருக்க, ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக் கட்சிகளும் அண்மையில் தமிழக மீனவர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டதையும் இதர மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, இந்திய மேலாதிக்கத்தையும் தலையீட்டையும் மேலும் தீவிரமாக்கக் கோருகின்றன. இலங்கை அரசின் அட்டூழியங்களுக்குக் காரணம் சீனாதான் என்றும், சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வேரூன்றிவிட்டதாலேயே இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோள்களை மதிக்காமல், தமிழக மீனவர்களை வேட்டையாடு கிறது என்றும் இக்கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. இலங்கையில் சீனா ஆதிக்கம் செய்தாலும், அல்லது இந்தியா ஆதிக்கம் செய்தாலும் அது ஈழத்தமிழருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரானதாகவே அமையும்.

இருப்பினும், தமிழக ஓட்டுக் கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதென்பது, இப்போது இந்திய மேலாதிக்கத்திற்கான நிகழ்ச்சிநிரலாக மாறிவிட்டது. இந்திய அரசையும் தெற்காசியாவில் அதன் மேலாதிக்கத்தையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதன் மூலம்தான், போர்க் குற்றவாளி ராஜபக்சே கும்பலைத் தண்டிக்க முடியும். கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் பின்னே வால்பிடித்துச் செல்வதன் மூலமோ அல்லது இந்திய மேலாதிக்க அரசை தாஜா செய்வதன் மூலமோ ஈழத் தமிழரின் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.இந்திய மேலாதிக்க நலன்களுக்காகத் தமிழக மீனவர்கள் காவு கொடுக்கப்படுவதையும் தடுக்க முடியாது.

மக்கள் கலை  இலக்கியக்  கழகத்தின்   புதிய ஜனநாயகம்  இதழில்  வெளியான  கட்டுரை  : தொலை பேசி : 00919446 32561

One thought on “இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம் : மனோகரன்”

  1. we can hardly do anything , just accept the reality and go along the river bed 

Comments are closed.