இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது : IMF

வாஷிங்டன்: இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் இப்போதைய சர்வதேச நெருக்கடிகளால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) பாராட்டியுள்ளது.

சர்வதேச அளவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஐஎம்எப் ஆராய்ந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடு குறித்தும் இதில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஐஎம்எப்பின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் ஆலிவர் பிளாங்கர்ட் கூறியிருப்பதாவது:

சின்னச்சின்ன தடைக் கற்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுவதைப் பார்க்கிறோம்.

இன்றைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தம் இந்தியப் பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இந்தியச் சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவை.

இப்போதைய சூழலில் இந்தியாவின் மொத்த உற்பத்தி 8 சதவிகிதமாக உள்ளது. இந்த அளவில் லேசான சரிவு இருக்கும். 8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் 7 சதவிகிதம் என்பதே ஆரோக்கியமான நிலைதான். 2010 வரை இந்த நிலை தொடரும்.

உலகப் பொருளாதார சூழல் இந்தியாவைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை. காரணம் அதன் மூடப்பட்ட தன்மை. இந்தியப் பொருளாதாரம் முழுமையாக உலகுக்குத் திறந்து விடப்படவில்லை என்பதே இன்றைக்கு இந்தியாவுக்கு சாதகமான அம்சம்தான்.

முந்தைய உலகப் பெருமந்தம் கூட பிரிட்டனில் ஏற்படுத்திய தாக்கத்தை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்த இந்தியாவில் ஏற்படுத்தாமல் போனது நினைவிருக்கலாம்…, என ஒலிவர் பிளாங்கட் தெரிவித்துள்ளார்.