இந்தியக் கலைஞர்களை யாரும் தடுக்க முடியாது- லஷ்மன் யாப்பா.

ஜூன் மாதம் முதல்வாரத்தில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்திய திரைப்பட அக்காடமியின் விருது விழாவுக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்திய இலங்கைத் தரப்புகள் இவ்விழாவை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தி முடிக்க தீவீரமாக இருக்கின்றன. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வீட்டின் முன்னால் நாம் தமிழர் இயக்கத்தினர் போராட்டம் நடத்திய போது அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட நடிகர் அமிதாப் இன்னமும் இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து அறிவிக்க வில்லை. ஆனால் விழா ஏற்பாடுகள் தீவீரமாக நடந்து வருகிற நிலையில் இலங்கை இந்திய அரசுகள் இந்த விழாவில் அமிதாப் உள்ளிட்ட இந்தி பிரபலங்களையும் தமிழக கலைத்துரையினரையும் களமிறக்க தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடையே பேசிய லஷ்மன் யாப்பா ” இந்திய நட்சத்திரங்கள் இலங்கை விழாவில் கலந்து கொள்வதில் எந்த விதமான சிக்கலும் இல்லை சிலர் எதிர்க்கிறார்கள் என்பதை அவர்களே பொருட்படுத்தவில்லை. இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி அவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இம்மாதிரியான கலை நிகழ்வுகள்தான் இப்போது தேவை. அதுதான் நாட்டின் முகத்தையே மாற்றியமைக்கும்” என்றார் அமைச்சர்.