வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் மூளைக்காய்ச்சல் நோய்.

 

யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாக வவுனியா பொது வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், தலையிடி, வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் வவுனியா வைத்தியசலைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஒருசில தினங்களிலேயே உயிரிழக்க நேர்ந்ததையடுத்து, இனந்தெரியாத ஒரு நோய் பரவத் தொடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் வைத்தியர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்ததாகவும், பின்னர் வைத்திய நிபுணர்கள் பலருடன் தொடர்பு கொண்டு ஆராய்ந்ததுடன், இத்தகைய நொயாளர்களின் இரத்த மாதிரிகளை கண்டிக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர், இந்த நோயாளர்கள் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படடதாகவும் வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்துள்ளார்.

வைரஸ் காரணமாக பரவும் தொற்று நோயாகிய மூளைக்காய்ச்சல் நோய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 68 பேருக்குப் பரவியிருந்ததாகவும் இவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்குத் தேவையான விலை உயர்ந்த அன்ரி பயடிக் மருந்துகள் வவுனியா வைத்தியசாலையில் இருப்பதாகவும், இங்கு அடிக்கடி விஜயம் செய்யும் சுகாதார அமைச்சர்கள், அமைச்சுக்களின் அதிகாரிகள் மூலமாக இந்த மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள டாக்டர் உமாகாந்த் அவர்கள் மூளைக்காய்ச்சல் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை உயிரிழப்பிலிருந்து காக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் அதற்குரிய சிறப்பான வசதிகள் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் மத்தியில் உள்ள நோயாளர்கள் முதலில் அனுமதிக்கப்படுகின்ற செட்டிகுளம் போன்ற வைத்தியசாலைகளில் இல்லாதிருப்பதாகவும் டாக்டர் உமாகாந்த் தெரிவித்துள்ளார்.

மூளைக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண் டும் என்று வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.