இடதுசாரி அரசியல்கட்சிகள்-தொழிச்சங்கங்கள் தலைமையில் வெலிக்கடைசிறைசாலை முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

சிறைச்சாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் நீண்டகாலமாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தும் மக்கள் ஆர்ப்பாட்டம் கடந்த 22-01-2010 அன்று கொழும்பில் இடம் பெற்றது. கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை தலைமையகத்திற்கு முன்பாக ஐந்நூறுக்கு அதிகமானோர் ஒன்று கூடி விசாரணை செய் அல்லது விடுதலை செய் “அரசியல் கைதிகளை வதைக்காதே” “அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வாபஸ் வாங்கு பேசுவது தர்மம் செய்வது சித்திரவதையா” “ அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்” போன்ற முழக்கங்களை சிங்களத்திலும் தமிழிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழங்கினர். இடதுசாரி அரசியல்கட்சிகளும் தொழிச்சங்கங்களும் தலைமைதாங்கினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தை அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக் குழுவின் அழைப்பாளர்களாக ஜோசங் ஸ்ராலின், இ.தம்பையா, சாந்த ஆகியோர் இருந்து வருகிறார்கள். இடதுசாரி ஜனநாயக அரசியல் கட்சிகள். தொழிற்சங்கங்கள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் மூத்த சமூக அக்கறையாளர்கள் ஒன்றிணைந்தே மேற்படி குழுவை அமைத்திருந்தனர். இக் குழு ஏற்கனவே அரசியல் கைதிகளை விடுவிக்கும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்த போதிலும் அவற்றுக்கு மகிந்த ஆட்சி செவி சாய்க்க வில்லை. யாவும் வெறும் பேச்சிலும் இழுத்தபிப்பிலுமே இருந்து வருகின்றது. ஏனவே தான் அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி மக்கள் இயக்கங்கள் மூலம் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்படி ஆர்ப்பட்டத்தை நடத்துவதாக அதன் அழைப்பாளர்களில் ஒருவரும் புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி இ.தம்பையா ஆர்ப்பாட்ட இடத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிக்கும் போது கூறினார்.

பெருந்தொகையான மக்கள் குறிப்பாக சிறையில் உள்ளோரின் உறவினர்கள் உட்பட அரசியல் கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒரு மணித்தியாலம் வரையான முழக்கமிட்டவாறு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் அருட்திரு சத்திவேல் செல்வி மேகலா சண்முகம், ஜோசங் ஸ்ராலின் புதிய ஜனநாயகட்சி பொதுச் செயலாளர். சி.கா. செந்திவேல் அமைப்பளர் இ.தம்பையா, அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா ஐக்கிய சோஷலிச கட்சி செயலாளர் சிறிதுங்க ஜயசூரியா ஆகியோர் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடாத்தினர்.

One thought on “இடதுசாரி அரசியல்கட்சிகள்-தொழிச்சங்கங்கள் தலைமையில் வெலிக்கடைசிறைசாலை முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!”

  1. கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட கலைப்பீட மாணவியான இராசையா துவாரகாவை பல இடங்களிலும் தேடிய போதும் காவல்துறையினர் தகவல்கள் எதனையும் தெரிவிக்க மறுத்திருந்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளை தொடர்ந்து அவர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து தூவரகாவை அவர்களின் பெற்றோர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மாணவர் அமைப்பு மேற்கொண்டிருந்தது. முதலில் துவாரகாவை தாம் கைதுசெய்யவில்லை என மறுத்த காவல்துறையினர் பின்னர் ஒப்புக்கொண்டதாக மாணவர் அமைப்பின் தலைவர் உடுல் பிரேமரட்னா தெரிவித்துள்ளார்.

    துவாரகாவின் பெற்றோரும் வடபகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், அண்மையில் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு பல மாணவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மாணவர் அமைப்பினரின் பாரபட்சமற்ற சேவை தொடரட்டும்!

    எல்லாவற்றிகும் மனித நேயம் வேண்டும்!

Comments are closed.