ஆள்காட்டுமாறு கே.பியிடம் கோரும் கருணாநிதி

புலம்பெயர் நாடுகள், தமிழகம் ஆகிய இலங்கைக்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான ஆதரவை சிதைத்து அவர்களைத் தனிமைப்படுத்தி இனச்சுத்திகரிப்பை நடத்துவதில் இலங்கை இந்திய அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு – இந்திய அரசு – இலங்கை அரசு என்ற முக் கூட்டணி மறுபடி களத்தில் இறங்கியிருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சனையிலிருந்து புலிகளின் பணம் குறித்த பல விடயங்களை கே.பி என்ற இலங்கை அரச உளவாலியூடாக இவர்கள் கையாள்வதாக உணரப்படுகிறது. இவ்வகையில் தமிழக அரசியல் வாதிகளைக் ஆள்காட்டுமாறு கே.பி யைக் கருணாநிதி கோரியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாதன் அளித்த பேட்டியில், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் அவர் தனது பேட்டியில்,
‘கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் தீவிரம் அடைந்திருந்தது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பினர்.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளும் விரும்பினர்.
இந்த முடிவை விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரனிடம் தெரிவித்தார். அதை அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கூறினார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால், விடுதலைப்புலிகளின் முடிவை வைகோ மாற்றினார்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமையும்போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலையை எடுக்க முடியும் என வைகோ கூறினார்’ என்று குமரன் பத்மநாதன் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பேட்டி உண்மையல்ல என்று மகேந்திரன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்க வேண்டும்.என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோரியுள்ளார்.