ஆயுதப் புரட்சியைக் கடைசி மூச்சுவரை அனுமதியேன் : சிதம்பரம்

chidambaramஇந்தியாவில் ஆயுதப்புரட்சி வெற்றி பெற தன்னுடைய கடைசி மூச்சுவரை அனுமதிக்க மாட்டேன் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாள் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

பயங்கரவாதத்துக்கு கடந்த 50 ஆண்டுகளில் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என மூன்று முக்கியத் தலைவர்களை இழந்த ஒரே இயக்கமாக காங்கிரஸ் உள்ளது.

நாட்டில் நக்சலைட்டு இயக்கம் வளர்ந்து வருகிறது. காங்கிரஸ், பாஜக ஆட்சிகளில் இந்த இயக்கத்தை குறைத்து மதிப்பிட்டதன் விளைவுதான் இது. இந்த இயக்கங்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் விஷம்போல் பரவியுள்ளன.

ஆயுதம் ஏந்திய புரட்சி மூலம் மைய அதிகாரத்தைக் கைப்பற்றுவது எனும் இவர்களது திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஆயுதம் என்பது வாக்குச் சீட்டுதான். இதைவிட வலிமையான ஆயுதம் வேறு கிடையாது. வாக்குரிமை ஆயுதத்தை நம்புபவர்கள்தான் இந்தியர்கள். இந்தியாவில் ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு ஒருபோதும் இடம் கிடையாது. என்னுடைய கடைசி உயிர் மூச்சுவரை இதனை நான் அனுதிக்க மாட்டேன்.

நக்சலைட்டுகள் நமது நாட்டைச் சேர்ந்தவர்களே. பாக்கிஸ்தான் தீவிரவாதிகளைப் போன்று இவர்கள் நம்முடைய எதிரிகள் அல்லர் என்றும் சிதம்பரம் கூறினார.