ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை : மகிந்த

ஆயுதங்களை கீழே வைத்து போர்த் திறன்களை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறி நாட்டை கூறுபோடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளியாகவிருந்த ஒருவரே இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணத்தை விடுவித்து ஒரு வருடகாலத்துக்குள் நாம் இவற்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. இதனை நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று மாலை அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது: தலைவர் அவர்களே, இந்த உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட உங்களுக்கு இலங்கை மக்களின் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். மனித குலம் எதிர்நோக்க நேரிட்டுள்ள முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உங்கள் வழிகாட்டலுடன் இந்த சர்வதேச மாநாடு துணியும். அதேபோல், பல பில்லியன் கணக்கான உலக மக்களின் வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழிகாட்டவும் உங்களால் முடியுமென நாம் நம்புகின்றோம்.

எனது தாய்மொழி சிங்களம். ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை மக்களின் இரண்டு மொழிகள். பல நூறு ஆண்டுகளாக பாவனையில் உள்ள இந்த இரண்டு மொழிகளும் இலக்கிய வளம் செறிந்தவை.

இம்மொழிகள், அரசகரும மொழிகளாக அங்கீகாரம் பெற்று நம்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் மேலும் வியாபிக்கப்படுவதைத் தொடர்ந்து இலங்கையின் சிங்கள, தமிழ் மக்களுக்கிடையிலான உறவு பலமடையும். எதிர்கால அபிவிருத்திக்கு அது பாரிய சக்தியாக அமையும். ஒரு தேசம் என்ற வகையில் எமக்காகக் காத்திருக்கும் அர்த்தமுள்ள சுதந்திரம் நீடித்த ஐக்கியம் ஆகியவற்றை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்வோம்.

இங்கு நாம் கலந்துரையாடவுள்ள தொனிப்பொருள், உலகின் சில மக்கட் பிரிவுகளின் வறுமைநிலை, பசிபட்டினியின் மீது எந்தளவுக்கு உலக உணவு நெருக்கடி தாக்கம் செலுத்த முடியும் என்பதும், ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் ஜனநாயக மயப்பட்டதாக மாற்றுவது எவ்வாறு என்பதும் உண்மையிலேயே தொலைநோக்குடைய ஓர் அணுகுமுறையாகும். மனித குலத்தின் நாளைய இருப்பின் மீது போலவே, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நிறுவன ரீதியான தேவைகளின் மீதும் அது கவனம் செலுத்துகின்றது.

இன்றைய உலக உணவு நெருக்கடி, துரதிஷ்டவசமாக பெரிதும் அபாயகரமான யதார்த்தமாக மாறியுள்ளது. நாம் அது விடயத்தில் கூட்டாகவும் அவசரமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் அது இன்றுள்ள நிலையைவிட பாரதூரமானதாக மாறுவதற்கு பெரிதும் வாய்ப்புள்ளது. அதேபோல், ஜனநாயகம் உழுத்துப்போன ஐக்கிய நாடுகள் சபையினதும் நாளைய இருப்பு ஒரு திருப்புக் கட்டத்தை அடைந்துள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தில் செல்வாக்கைப் பிரயோகிக்கத்தக்க கருத்திட்டங்களின் ஊடாக கமத்தொழிலிலும், கமத்தொழில் ஆராய்ச்சிகளிலும் அதிகளவில் முதலீடு செய்வதன் மூலமும், சிறந்த முறைமைகளையும் தொழில்நுட்பங்களையும் பரிமாறிக் கொள்வதன் மூலமும் பாரியதொரு பங்களிப்பை நல்குவதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது. இது, வளர்முக நாடுகளில் வாழும் கிராமிய மக்களை வலுவூட்டுவதற்கு இன்றியமையாத ஒரு காரணி என்பதை நாம் மறந்துவிடலாகாது. வளர்முக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வாழ்வதும், தமது வாழ்வாதாரங்களுக்காக அவர்கள் கமத்தொழிலில் தங்கியிருப்பதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பை நிலைபெறச் செய்வதற்கெனில் கமத்தொழில் துறையை பலப்படுத்தி, அதற்கு புத்துயிரூட்ட வேண்டும். பல்வேறு செயற்பாடுகளினூடாக சிறிய மற்றும் நடுத்தர அளவான கமக்காரர்களை வலுவூட்டுவதன் மூலம் மாத்திரமே இதனைச் சாதிக்கலாம். உணவு நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கெனில், தன்னிறைவை எய்துவது கட்டாயமானதாகும். எனவே, ஏற்றுமதிச் சந்தைக்காக பண்டங்களை உற்பத்தி செய்வோராக எமது நாடுகளின் கமக்காரர்களைத் தூண்டுவதில் தொடர்ந்து ஈடுபட வேண்டியதில்லை. சமூகப் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புற மக்களை வலுவூட்டுமொன்றாகவே நாம் அதனை நோக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் நாம் துணிவு பெறுகின்றோம். எமது நாட்டில் உரமானியம், கடற்றொழில் மானியம் போன்ற சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் இதன் காரணமாகவே ஆரம்பித்தோம். சில பலம்பொருந்திய நாடுகளும், பலம்பொருந்திய நிறுவனங்களும் இதுவிடயத்தில் தமக்கு வழங்கும் ஆலோசனைகள் இதற்கு நேரெதிரானவையாகவே உள்ளன. எனினும், நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் எமது நாடுகளின் அப்பாவி மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியனவற்றை மாத்திரம் நிறைவேற்றுவதில் சங்கற்பம் பூண வேண்டும்.

தானியக்களஞ்சியம் ஆக்குவதே நோக்கம் அண்மையில் நடைபெற்ற சார்க் அரசுத் தலைவர்கள் உச்சி மாநாட்டில், உணவு நெருக்கடியை வெற்றிகொள்வதற்காக பிராந்தியமொன்றாக இணைந்து செயலாற்றுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளதாக இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் பெருமையுடன் தெரிவிக்கின்றேன். முன்னைய நாட்களில் உணவு உற்பத்திக்காக நாம் பின்பற்றிய முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பணிகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டி எமது பிராந்தியத்தை உலகின் முன்னணி தானியக் களஞ்சியமாக மாற்றுவது எமது நோக்கமாகும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கும் இணங்கினோம்.

அதேபோல், சார்க் பிராந்திய உணவு வங்கியை நிறுவிச் செயற்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்தோம். இதன் காரணமாக தென்னாசிய மக்களின் உணவு, பேõஷணைப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் துணிவுபெற்றோம். உணவு நெருக்கடியின் மூலம் தோன்றக்கூடிய பாதக தாக்கங்களைத் தடுப்பதற்கும் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் உரோமõபுரியில் நாம் தொடக்கிவைத்த அகல்விரிவான முயற்சிகளுக்கும் இதன் காரணமாக பங்களிப்புக் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

உணவு நெருக்கடியான தீர்வுகளைத் தேடும் அதேவேளையில், எரிசக்தி நெருக்கடிக்கும் நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வுகளைத் தேட வேண்டியுள்ளது. பண்புத்தரத்தில் உயர்ந்த, தீங்குபயக்காத அதேபோல், வினைத்திறன் மிக்க, கிரயத்தை நியாயப்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு எமது சுவட்டு எரிபொருள்களையும் மாற்று எரிசக்தி வழங்கலையும் புதிய துறைகளின்பால் இட்டுச் செல்வதும் அத்தியாவசியமான அம்சமாகும். இதற்காக தற்போது தம்வசமுள்ள எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறே, இன்னும் நெடுங்காலத்துக்கு சுவட்டு எரிபொருள்களில் தங்கியிருக்க வேண்டியேற்படும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

வளர்முக நாடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொடுப்பது இன்றியமையாததாகும். அதனை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். தென்னாசியாவில் அபிவிருத்தி கண்டுவரும் மனித, விஞ்ஞான திறன்களையும் வளங்களையும் பயன்படுத்தி, எம்முடையது எனக் கூறக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான யுகம் தோன்றியுள்ளது. எமது பிராந்தியத்தில் சுலபமாகக் காணக்கிடைக்கும் இயற்கை வளங்களான சூரிய ஒளியிலிருந்தும் காற்றுச் சக்தியிலிருந்தும் சமுத்திரத்திலிருந்தும் ஆகக்கூடிய பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மனித குலத்தின் தேவைகளை, இலாபநோக்கை மாத்திரம் குறியாகக் கொண்ட தனியுரிமைச் சந்தையொன்று நிர்ணயிப்பதற்குத் தொடர்ந்தும் இடமளிக்க முடியாது.

மேற்சொன்ன நோக்கங்களை எய்துவதனால், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் முகவர் நிறுவனங்களும் கொள்கைச் சட்டகமொன்றை உருவாக்குவதற்குத் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்பது இலங்கையின் அபிப்பிராயமாகும். இதன் மூலம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருக்கும் வளர்முக நாடுகளுக்கும் அணுக்கருச் சக்தியின் புத்தெழுச்சியினூடான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும். அதுபோன்ற ஒன்றின் மூலம் எரிசக்தி, புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகள், காலநிலை மாற்றங்கள் போன்ற துறைகளுக்கு மாத்திரமன்றி, ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும்கூட செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும் என நாம் நம்புகின்றோம். பசியிலும் பட்டினியிலும் வாடும் நிலை ஏற்படவில்லை

சுவட்டு எரிபொருள்களின் மீது தங்கியிருப்பதை விட்டொதுங்கி, வேறு பல எரிசக்திகளைப் பயன்படுத்துவதற்கான அவசர முயற்சிகள் பற்றியும் நாம் இதனைவிட விழிப்புடன் செயற்பட வேண்டும். உயிரியல் எரிபொருள் பயன்பாட்டுக்காக காண்பிக்கும் அவசரமும் பதற்றமும் காரணமாக உணவுப்பொருள் விலைகளும் அதிகரித்திருப்பதை நாம் கண்ணுற்றோம். குறுகிய காலத்தில் எந்தளவு இலாபகரமான போதிலும் உயிரியல் எரிபொருள் உற்பத்திக்காக கமத்தொழில் காணிகளைப் பயன்படுத்தலாகாது என்பது எமது குறிக்கோளாகும். அதிஷ்டவசமாக, இலங்கை கடந்த மூன்றாண்டு காலத்துள் பல்வேறு செல்வாக்குகளுக்கும் உட்படாமல் சுயாதீனமாக முன்னோக்கிச் சென்றதன் காரணமாக, எமது அப்பாவி மக்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பசியிலும் பட்டினியிலும் வாட வேண்டிய நிலை ஏற்படவில்லை. காலநிலை மாற்றங்கள் தொடர்பாக சார்க் பிராந்திய அரசுத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிய விடயம், மிகவும் அகல்விரிவான ஒரு சட்டகத்தினுள் சூழற்பாதுகாப்பு, சூழற்பேணுகை, சூழல் நீதி ஆகிய விடயங்களுக்காக கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். தென்னாசியாவின் மரபுரிமையின் ஒரு கூறாகிய, இயற்கைக்கு எதிராக செயலாற்றாமையை உயிர்ப்பூட்ட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தினோம். மனிதகுலம் தொன்றுதொட்டு அநாவசியமாக இயற்கையின் இருப்பின் மீது பாதக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பாதகமான காலநிலை மாற்றங்கள் தோன்றியிருப்பதற்கு மனித செயற்பாடுகளே காரணமாகும். அதன் காரணமாக, அவற்றுக்கு மனிதனே தீர்வுகாண வேண்டும். ஐ.நா. சபையின் கடமை

ஐக்கிய நாடுகள் சமவாயத்துடுன் கண்டங்களுக்கிடையிலான யுத்தங்கள் மூழுவது பெருமளவுக்குத் தவிர்க்கப்பட்டிருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எவ்வாறாயினும், தமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக பலஸ்தீனத்திற்கு நியாயமானதொரு போராட்டத்தில் ஈடுபட நேரிட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இன்று ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் எமது மக்கள் பலதரப்பட்ட கொடிய, பயங்கரவாத அழிவுகளைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக இத்தகைய உபத்திரவங்களிலிருந்து இன்றைய, நாளைய சந்ததியினரைக் காப்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீங்காத கடமை என்பதை நான் தெரிவிக்கின்றேன். நாம் அது பற்றி பேசித் திரிந்தது போதும். இதுவிடயத்தில் உறுதியான ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளவேண்டும். பெரும்பாலான நாடுகளைப் போன்றே இலங்கையும் இந்த உபத்திரவத்திலிருந்து மீள முடியவில்லை. அரசியல் முறைமைகளின் ஊடாக தீர்க்கப்படக்கூடிய ஏராளமானவற்றை சித்திரித்து, உள்நோக்கங்கொண்ட ஒரு பயங்கரவாதக் குழு மிகவும் கொடூரமானதும் மூர்க்கத்தனமானதுமான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்த எல்.ரீ.ரீ.ஈ. எனும் பயங்கரவாதக் குழு தற்கொலைக் குண்டுதாரிகளை ஈடுபடுத்தி, தமக்கு வாய்ப்பான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிப்பது, சட்டரீதியாக செல்லுபடித் தன்மையையும் அரசியல் ரீதியான அங்கீகாரத்தையும் பெறுவதை நோக்காகக் கொண்டே என்பதை நாம் மறந்துவிடலாகாது. பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ளதும் கொடிய பயங்கரவாதிகளின் அழிவு நாசகாரச் செயற்பாடுகளே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகளையிட்டு நான் கவலை தெரிவிக்கின்றேன்.

பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் அடிபணியாது எமது அரசாங்கம், விடயங்களை நன்கு ஆராய்ந்து சகல இனங்களினதும் அபிலாஷைகளும் உரிமைகளும் ஈடேறக்கூடிய அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு என்றும் தயாராக உள்ளது. எம்முடைய ஓர் இனப்பிரிவினராகிய தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினரைப் பயமுறுத்தி, அவர்களை வட மாகாணத்தில் பலவந்தமாகத் தடுத்து வைத்துக்கொண்டு அந்த இனப்பிரிவுக்கு ஜனநாயகத்தை இழக்கச் செய்யும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளுக்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமும் நாம் அதனை நிரூபித்துள்ளோம்.

பல நூற்றாண்டுகளாகவே இலங்கையில் ஏனைய இனப் பிரிவினருடன் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைவர்களுடன் எமது அரசாங்கம் தொடர்ந்தும் உரையாடலில் ஈடுபட்டுள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ்த் தலைவர்கள் எமது அரசாங்கத்தின் தொழிற்படு அமைச்சர்களாகவும் உள்ளனர். இலங்கையின் சட்டமா அதிபரொருவராகப் புகழ்பூத்த அதேபோல், யாவரினதும் கௌரவத்திற்குப் பாத்திரமான ஒரு தமிழ் அரசியல்வாதியான சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், 1904 செப்டெம்பர் மாதத்தில் தெரிவித்த ஒரு கூற்றை இங்கு நான் மேற்கோள் காட்டுகின்றேன்; நான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். எனினும், சிங்கள மக்களைப்போன்ற நட்புணர்வு பாராட்டும் எந்தவோர் இனத்தையும், அந்தளவு உயர் குணவியல்புகளைப் பேணியொழுகும் எந்தவோர் இனத்தையும் உலகின் எந்தவோர் இடத்திலும் நான் கண்ணுற்றதில்லை. அன்னாரின் இந்தக் கூற்றிலிருந்து எமக்கு ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையாகும். எனினும், இன்று காழ்ப்புணர்வுடன் இயங்கும் ஒரு குழுவினர் அவை யாவற்றையும் தலைகீழாக மாற்றியுள்ளனர். இலங்கையில் ஆட்சிபீடமமர்ந்த எல்லா அரசாங்கங்களும் இன்றைய இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால்நூற்றாண்டு காலமாக பிரயத்தனம் மேற்கொண்டுள்ளன. இணைத் தலைவர்களின் கண்காணிப்புக்குட்பட்டிருந்த அதேபோல், நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் இயங்கிய சமாதான செயற்பாடும் இதில் அடங்கும். இந்தச் சமாதானச் செயற்பாட்டையும் கூட பயங்கரவாதப் புலிகள் மிகவும் இழிவாகவே நோக்கினர். பயங்கரவாதப் புலிகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கற்பித்து வெளிநடப்புச் செய்தனர். அதனையடுத்து, அவர்கள் மீண்டும் அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். எல்லா வேளைகளிலும் இந்த வேலைத்திட்டத்தையே அவர்கள் முன்னெடுத்தனர். ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் இந்தப் பயங்கரவாதக் குழுவுடன் எமது அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமானால் அவர்கள் தமது சகல ஆயுதங்களையும் கீழே வைத்து, அவர்களின் போர்த் திறன்கள் யாவற்றையும் கலைத்துவிட்டு ஜனநாயக சட்டகமொன்றில் பிரவேசிக்க வேண்டும். அப்படியானால் தான் அது சாத்தியமாகும். சட்டரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசாங்கம் என்ற வகையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடென்ற வகையிலும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டை மீறி, நாட்டைக் கூறுபோடுவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை அரசாங்கம் உறுதிபடத் தெரிவிக்கின்றது.

எமது மக்களுக்கு ஜனநாயகச் செயற்பாட்டின் பெறுபேறுகளை அனுபவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். அதேபோல், தற்போது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் மக்களுக்கு இயன்றளவு துரிதமாக அபிவிருத்திச் செயற்பாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் எமது மற்றுமொரு நோக்கமாகும். தற்போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படும் துரித பொருளாதார முன்னேற்றத்திற்கு இணையான ஒரு முன்னேற்றத்தை வடக்கிலும் நாம் ஏற்படுத்த எண்ணியுள்ளோம். முன்னார் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் பயங்கரவாதிகளாக இயங்கியய சிலர் இன்று கிழக்கு மாகாணத்தின் உறுப்பினர்களாக ஜனநாயக வழிமுறையில் தெரிவாகியுள்ளனர். அதேபோல், முன்னர் எல்.ரீ.ரீ.ஈ. சிறுவர் போராளியொருவராக ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒருவரே, இன்று அதன் முதலமைச்சராக அமர்ந்துள்ளார். இவை யாவற்றையும் நாம் கிழக்கு மாகாணத்தை விடுவித்து ஓர் ஆண்டுக்கும் குறைவான ஒரு காலத்துள் நாம் நிறைவேற்றினோம்.

எமது நாட்டில் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள ஆட்களுக்கு மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்குவதற்கான எமது வேண்டுகோளுக்கு சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக் கிட்டியது. உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள ஆட்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வருகை தந்த ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு தெரிவித்தார். பிரதான பயங்கரவாதக் குழுக்களில் இணைந்துள்ளவர்களுக்கு நிவாரண உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆச்சரியமூட்டும் ஒரு நிலைமையை இலங்கையில் காண முடிகின்றது. அரச மற்றும் கிளர்ச்சிக்கார குழுக்களை பொதுமக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடும் துன்புறுத்துமோர் ஆயுதமாக உணவைக் கையாண்ட சந்தர்ப்பங்களை உலகில் நாம் காணலாம். எனினும் இலங்கையில் நிலவும் இந்நிலைமை இவ்வகையில் நோக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தி, முன்மாதிரியொன்றாக பெரும் பிரபல்யத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதொன்றாகும்.

புலிகள் பறித்து செல்கின்றனர்

மனிதாபிமான உதவிகள் என்ற ரீதியில் வழங்கப்படும் பண்டங்களிலிருந்து பெருமளவானவற்றை எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் பறித்துச் செல்கின்றனர் என்பதை நாம் நன்கு அறிவோம். எனினும், எமது அரசாங்கம் இதுவரையில் இந்த மனிதாபிமானக் கொள்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது. நாம் பெற்றுக்கொடுக்கும் பொருள்களை உணவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்வதில்லை. மருந்து வகைகள், வேறு அத்தியாவசியப் பண்டங்கள் போன்றே, பாடசாலைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அவசியமானவை, ஆசிரியர்கள், மருத்துவர்கள், தாதியர் மற்றும் வேறு அத்தியாவசிய பணியாள் தொகுதியும் இதில் அடங்கும். அதுமாத்திரமன்றி, அந்தப் பிரதேசங்களில் உற்பத்தியாகும் நெல்லையும் ஏனைய உணவுப் பொருட்களையும் அரசாங்கம் கொள்வனவு செய்கின்றது. உலகின் எந்தவொரு நாட்டிலும் தம்மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு இத்தகைய மனிதாபிமான உதவிகளை வழங்கும் ஓர் அரசாங்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எமது அரசாங்கம் இந்த மனிதாபிமான உதவி வழங்கலை தமது நீங்காக் கடனாகவே கருதுகின்றது. இது எமது கொள்கையாகும்.

இலங்கையின் சிக்கலார்ந்த நிலைமைகளுக்கு விழிப்பாகவே முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அது ஒரு கோணத்தில் குற்றச்செயல்களுக்கு வேலியமைக்கும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் செயற்பாடொன்றின் மூலமும் அதேபோல், பொதுமக்கள் அபிப்பிராயமொன்றை உருவாக்குவதை நோக்கிய சகிப்புத் தன்மையுடன்கூடிய அரசியல் எத்தனமொன்றின் மூலமும் வகுத்தமைக்கப்பட வேண்டியதொன்றாகும். கடினமானதும் இன்றியமையாததுமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதை நாம் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றியுள்ளோம். அவ்வாறே, எமது நாட்டின் வட மாகாணத்திலும் அதனைச் சாதிக்க முடியும் என நாம் திடமாக நம்புகின்றோம். இந்தக் கூட்டத்தொடர் புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றத்தை எடைபோடுவதற்குத் தக்கதொரு சந்தர்ப்பமாகும். பெரும்பாலான செயற்பாடுகளின் முன்னேற்றம் பின்னடைவுற்றிருப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும். உலக பொருளாதார வளர்ச்சி வேகத்தில் பின்னடைவு, நிதித்துறையின் சிக்கலான தன்மை, இலாபமீட்டலை மாத்திரம் இலக்காகக் கொள்ளல், உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றே காலநிலை மாற்றங்களின் தாக்கம் வெளிப்படையாகத் தோற்றமளிப்பதுடன், அவை புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிக் கடும் பிற்போக்கான தாக்கமொன்றையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே, அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சில நாடுகளின் தலைவர்களுக்கு அதேபோல், தலைமைக்கு சில எதிர்ப்புக்கள் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள், உண்மையிலேயே அந்தந்த நாடுகளில் வாழும் அப்பாவிப் பொதுமக்கள் மீதே தொடுக்கப்படுகின்றன. படிப்படியாக விஸ்வரூபம் எடுத்துவரும் சர்வதேச பயங்கரவாதம் மாத்திரமன்றி, அதற்கிணையான ஆயுதக் கடத்தல் வியாபாரம், சட்டவிரோத மோசடி வஞ்சக் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், கறுப்புப் பண வியாபாரம் போன்றே, பயங்கரவாதக் குழுக்களினால் இயக்கப்படும் பாரியளவிலான வியாபாரங்களும் மனித குலத்தினதும் நாகரிகத்தினதும் அடிப்படைக் கோட்பாடுகள் மீது கடும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. நாம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் இவற்றை முறியடிப்பதற்கு இயலுமை பெறவில்லை என்பது தெளிவானது. தேசியளவிலும் சர்வதேசளவிலும் புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய நகர்வு இதன் காரணமாக மேலும் சிக்கல் நிலையை அடைந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் தெரிவித்தவாறே பயங்கரவாதம் காரணமாக நாம் சிற்றளவிலேனும் பெற்றுக் கொண்டுள்ள வெற்றிகள் யாவும் பின்னடைவுற்றுள்ளன. இணையத்தள அச்சுறுத்தல்

உலகளாவிய பயங்கரவாதம் போன்றே, சகல நாடுகளினதும் பெறுதற்கரிய சொத்தாகிய சிறுவர் பரம்பரையினரை ஆட்டிப்படைக்கும் மற்றுமொரு பேரழிவும் உள்ளது. அது சைபர் இடைவெளி இனப்படும் இணையத்தினூடாக உருவெடுத்துள்ள அச்சுறுத்தலாகும். இணையத்தினூடாக வரும் ஆதிக்க சக்திகள் எமது சிறுவர் பரம்பரையினரின் மனங்களைப் பாழ்படுத்துவதுடன் மாத்திரமன்றி, பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்துவது போன்றே, போதைப்பொருள் பாவனையாளர்களினதும் ஆபாச இணையத்தளங்களை இயக்குவோரினதும் இரையாக மாறுகின்றன. இலங்கையில் இத்தகைய ஆபாசமான இணையத்தளங்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளையும் நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். இது உலகளாவிய தலைவர்களின் கவனம் ஈர்க்கப்பட வேண்டிய முக்கிய ஒரு துறை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்தப் பாதகமான போக்கு தொடர்ந்து செல்வதை முறியடிப்பதற்கு உலகத் தலைவர்கள் குறுகியகால, நீண்டகால அடிப்படையில், இயன்றவு விரைவாக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகளையும் எமது ஏனைய அபிவிருத்திக்கான நோக்கங்களையும் ஈடேற்றிக் கொள்வதற்கும் நாம் அடைந்துள்ள வெற்றிகளை நிர்மூலமாக்குவதற்கும் எத்தனிக்கும் குழுக்களை தோல்வியடையச் செய்ய முடிவது, நாம் மேற்கொள்ளும் திடசங்கற்பமான முயற்சிகளினூடாக மாத்திரமே. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் எ ன்ற வகையில் நாம் பேரர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென நான் நம்புகின்றேன். அதன் காரணமாக, மனித சமூகத்திற்காக வேறொதுக்கப்பட்ட இம்மாபெரும் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்னோடிகளாக அமைந்தவர்கள் எதிர்பார்த்த வரம்புகளையும் முறியடித்து நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதனை நாம் இன்று நிறைவேற்றாத பட்சத்தில் நாளைய சந்ததி எம்மைக் குறைகூறுமென நான் நினைக்கின்றேன். கௌரவ தலைவர் அவர்களே, இறுதியாக எனது இந்த உரையை புத்த பகவான் போதித்த ஒரு தம்ம பதத்துடன் நிறைவு செய்ய அனுமதி கோருகின்றேன். வெற்றிவீரன் பகைமையை வளர்க்கிறான்தோல்வியுற்றவன் நோவுடன் கிடக்கிறான் வெற்றியையும் தோல்வியையும் விரும்பாத சாந்த குணமுடையவன் உவகையோடு வாழ்கிறான்.