ஆதரவற்று இருக்கும் மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் கோரிக்கை.

21.08.2008.
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் ஆயர், விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆதரவற்று திறந்தவெளியில் இருக்கும் மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்து தருவது உடனடித் தேவை என்று குறிப்பிட்டார்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையற்ற முறையில் கொண்டுவருவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அம்னேஸ்ட்டி இன்டர்னேஷனலின் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதாக கூறிய ஆயர், அதேநேரத்தில் இருதரப்பினரும் இச்செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குடும்பத்தில் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் அனைவரையும் புலிகளாக அரசு சந்தேகிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்