ஆண்டர்சனை தப்பவிட்டது சரிதான் -ப்ரணாப் முகர்ஜி.

இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை தப்பவிட்ட ராஜீவ்காந்தி மற்றும் அவரது அரசியல் சகாக்கள் தொடர்பான சர்ச்சைகள் இந்தியா முழுக்க கடும் கணடங்களை எழுப்பியிருக்கும் நிலையில் வாரன் ஆன்டர்சனை அமெரிக்கா செல்ல அனுமதித்தது அப்போதைய சூழ்நிலை கருதி எடுத்த முடிவு என்றார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட சமயத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டதாக அர்ஜுன் சிங் தெரிவித்திருந்தார். இதனால் அப்போதைய சூழ்நிலை கருதி ஆன்டர்சனை விடுவிக்க அவர் முடிவெடுத்திருக்கலாம். அப்படி விடுவித்திருந்தால் அது சரியான நடவடிக்கைதான் என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். வாரன் ஆன்டர்சன் இந்தியாவைவிட்டு தப்பிச் சென்றது குறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் நெருக்குதல் எழுந்துள்ளது. இந்நிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிரணாப் முகர்ஜியை சந்தித்த செய்தியாளர்கள், அர்ஜுன் சிங்தான் ஆன்டர்சனை தப்பவிட்டதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போபால் விஷவாயு கசிவு சம்பவம் நிகழ்ந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே பிரதான பணியாக இருந்திருக்கும். இதனால் சூழ்நிலை கருதி ஆன்டர்சனை விடுவிக்க அர்ஜுன் சிங் முடிவெடுத்திருந்தால் அதில் தவறில்லை என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.