ஆசிரியர் கனவில் மணல் சுமக்கும் மாணவர் : 1014மதிப்பெண் எடுத்தவரின் அவலம்!

ராமநாதபுரம் : அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர், விடுமுறை நாட்களில் கூலி வேலை செய்து தமது கல்வி செலவை சமாளித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தை சேர்ந்த மங்களசாமி மகன் ராஜசேகர்(18). இவரது தந்தை விவசாயி என்பதால், கல்வி இவருக்கு எட்டா கனியாக இருந்தது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மேலசீத்தை வேலுமாணிக்கம் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு (311 மதிப்பெண்), தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 (1014 மதிப்பெண்) முடித்தார். ஆசிரியராக வேண்டும் என்ற தனது கனவின் படி, நல்ல மதிப்பெண் இருந்ததால், ராமநாதபுரம் அருகே மஞ்சூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இடம் கிடைத்தது. கல்வியில் அதிக நாட்டம் இருந்ததால், அங்கேயே தங்கி படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக அதிக அளவில் செலவானது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குடும்பத்தாரை சிரமப்படுத்த விரும்பாத ராஜசேகர், விடுமுறை நாட்களான சனி, ஞாயிறில் கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார்.

 மணல் லாரியில் லோடுமேன், கட்டுமான பணியில் சித்தாள் என கிடைத்த வேலையை செய்து தனது நிலையை சமாளித்து வருகிறார். தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கூட இல்லாத நிலையில் வறுமை வாட்டினாலும், ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இளம் பயதில் பளுவை சுமந்து வருகிறார். ராஜசேகர் கூறியதாவது: எனது குடும்பத்தார் மிகவும் சிரமப்படுகின்றனர். அக்கா, தம்பி என எனக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளன. படித்தால் ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருப்பதால், படிப்பை பெறுவதற்காக கூலி வேலைகளை செய்து வருகிறேன். கூலி வேலை என்றாலும் அதிலும் ஈடுபாடுடன் செய்வதால் 200 ரூபாய் வரை கூலி தருகிறார்கள். யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும், என்றார். மாணவருக்கு உதவ விரும்புபவர்கள் 99420-84082 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.