அ.தி,மு,க – ம.தி.மு.க மோதல் வை.கோ இன் தம்பி மீது வழக்கு

Vaiko-house-protestஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சங்கரன்கோவிலை அடுத்த கலிங்கப்பட்டியில் வைகோ வீடு அருகே அ.தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையாபாண்டியன் பேசும்போது, வைகோவை குறை கூறி பேசினார்.

இதற்கு வைகோ வீட்டருகே நின்ற ம.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்த கூட்டத்தில் கல் வீசினர். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது.

உண்ணாவிரத பந்தலில் போடப்பட்டு இருந்த சேர்களை ம.தி.மு.க.வினர் உடைத்து வீசினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் ரமேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையாபாண்டியன் உள்பட 3 தொண்டர்களும், ம.தி.மு.க.வை சேர்ந்த ஜோதிராஜ் உள்பட சிலரும் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அமைதிப்படுத்தினர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல் அணியை சேர்ந்த ரமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வேண்டும் என்றே கலகம் ஏற்படுத்துதல், கல்வீசி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ம.தி.மு.க.வை சேர்ந்த ஜோதிராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தன் கட்சி பிரமுகர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்காக கலந்துகொள்ள சென்ற வைகோ, தகவல் அறிந்து கலிங்கப்பட்டி வந்தார். தொண்டர்களை அமைதிப்படுத்திய அவர், கட்சி தலைமை தொண்டர்களூக்கு அறிவுருத்தாதன் விளைவே இந்த சம்பவம்’’என்று ஆவேசப்பட்டார்.
அவர் தனது வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:–
கலிங்கப்பட்டியில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் நடந்த சம்பவம் நடந்ததாகவே இருக்கட்டும். யாரும் ஆத்திரமோ, கோபமோ படவேண்டாம். அ.தி.மு.க.வில் நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்னை உயர்வாக மதித்து பேசக்கூடியவர்களும் இருக்கிறார்கள். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவை இங்கு வந்து பேச அழைத்தார்கள். ஆனால் அவர் என் மீது உள்ள நட்பின் காரணமாக இங்கு வரவில்லை.

இந்த வீட்டிற்கு காமராஜர், குமாரசாமி ராஜா, ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் வந்து இருக்கிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரிடமும் வெறுப்போ, கசப்போ, ஆத்திரமோ, பகையோ கிடையாது. யார் கஷ்டப்பட்டாலும் நான் வருத்தப்படத்தான் செய்வேன். என்னை பேசியவர்களுக்கு அரசியலில் உயர்வு கிடைத்தால் எனக்கு சந்தோஷம்தான். ஆனால் கிராமப்புறத்தில் ஒற்றுமையை யாரும் கெடுக்கக்கூடாது.
இந்த வீடு சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. யார் உதவி என்று இங்கு வந்தாலும் எனது தாய், தம்பி உதவி செய்வார்கள். அதே நேரத்தில் என்னால் முடிந்த உதவியையும் செய்வேன். அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. அரசியலில் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பார்த்து சிறைக்கு சென்று இருக்கிறேன். இந்த சம்பவத்தில் காவல் துறையினர் நேர்மையோடும், நடுநிலையோடும் நடந்து கொண்டனர். ஆனால் இங்கு இவ்வளவு போலீசார் வர வேண்டியது இல்லை. அனைவரும் ஆத்திரம், அவசரப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறினார்.

தானும் தனது அரசியல் வியாபாரமும் என வாழ்ந்துவந்த ஜெயலலிதாவை ஈழ வியாபாரத்திற்காக ஈழத் தாயாக உருவேற்றி வேடம் கட்டிய வை.கோவின் நிலையே கவலைக்குரியது.