அவலப்படும் மக்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அவலப்படும்  மக்களை உலக நாடுகளிடம் காட்டி, அவர்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது.

மக்கள் மீள்க் குடியேற்றப்படுவர் எனவும், குடியேற்றப்பட மாட்டார்கள் என்று தேவைக்கேற்ப மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு, இலங்கை அரசு மக்களையும், பன்னாட்டு சமூகத்தையும் குழப்பி வருகின்றது.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, முகாம்களில் மக்களுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவி இருப்பதால், விடுதலைப் புலிகள் முற்றாகக் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்ட பின்னரே, மக்களை மீள்க் குடியமர்த்த முடியும் எனத் தெரிவித்தார்.

ஆனால் அதே நாளன்று தாய்லாந்தில் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவைச் சந்தித்த இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, வன்னி மக்கள் விரைவில் மீள்க் குடியேற்றப்பட இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் நேற்று உரையாற்றிய அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, அதே வாக்குறுதியை மீண்டும் வழங்கியிருக்கின்றார்.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியேற்றும் திட்டம் எதுவும் இலங்கை அரசிடம் இல்லாத போதிலும், பன்னாட்டு சமூகத்திடம் நிதி பெறுவதற்காக இலங்கை அரசு பொய்யுரைத்து வருகின்றது.

மீள் குடியேற்றம் மட்டுமன்றி, இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடித்திருப்பதாகவும், வடக்கு கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை தமது அரசு மெற்கொள்ள இருப்பதாகவும் தனது உரையில் பொகொல்லாகம மேலும் கூறியிருக்கின்றார்.

இதேவேளை இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, மற்றும் ஆஸ்ட்ரேலியா போன்ற பல நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சர்களையும், ரோஹித பொகொல்லாகம, சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்துப்பு அனைத்துமே  மக்களை  மீள் குடியமர்த்துவதாக கூறி நிதி பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.