அல் ஷபாப் இயக்கப் போராளிகளுக்கான ஆதரவை நிறுத்தாவிட்டால் எரித்திரியாவுக்கு எதிராக நடவடிக்கை : அமெரிக்கா எச்சரிக்கை!

 
 
 
சோமாலியாவிலுள்ள போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதை எரித்திரியா நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கெதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமென அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.கென்ய தலைநகர் நைரோபியில் சோமாலிய ஜனாதிபதி ஷேய்க் ஷெரீப் ஷேய்க் அஹமட்டுடனான பேச்சுகளைத் தொடர்ந்தே இதனைத் தெரிவித்துள்ள ஹிலாரி எரித்திரியாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையெனவும் தெரிவித்துள்ளார்.மேலும், சோமாலிய ஐக்கிய அரசாங்கத்திற்கெதிரான ஆதரவை அமெரிக்கா விரிவாக்கப் போவதாகவும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.

சோமாலிய அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அல் ஷபாப் இயக்கப் போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை எரித்திரியா மறுத்து வருகின்றது.

அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2,50,000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ள அதேவேளை, அல் ஷபாப் இயக்கம் பலம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆபிரிக்காவுக்கான பதினொரு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஹிலாரி நைரோபியில் சோமாலிய ஜனாதிபதியுடன் பேச்சுகளை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் பின்னர் சோமாலிய ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஹிலாரி;

அல் ஷபாப்புக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்தி அயல் நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுவதற்கு எரித்திரியாவுக்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புவதுடன், அவர்கள் ஆதரவு வழங்குவதை நிறுத்தாவிட்டால் அதற்கெதிரான நடவடிக்கை எடுக்கப்படுமென்பதனையும் கூற விரும்புகிறோம்.

சோமாலியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அயல்நாடுகளில் ஊடுருவி அயல்நாடுகள் மற்றும் தூரவுள்ள நாடுகளுக்கெதிரான தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு சோமாலியாவை ஒரு தளமாகப் பயன்படுத்த அல் ஷபாப் விரும்புகிறதென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சோமாலியாவை அல் ஷபாப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமானால் அது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு சோமாலியாவுக்கு படைகளை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ள போதிலும் சோமாலியாவுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா இரு மடங்காக அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலிலுள்ள அல் ஷபாப் உள்ளிட்ட எதிர்ப்பு சக்திகளிடமிருந்து சோமாலிய அரசு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.