அரசு முன்வைக்கும் தீர்வை சிறுபான்மை மக்களும் தமிழ்க் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் ஐ.தே.க. எதிர்க்காது!

08.08.2008.

இந்த நாட்டின் பிரச்சினைக்கு அரசு முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தை சிறுபான்மை மக்களும் தமிழ்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் அத்தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் எதிர்க்காது. அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராகவேயுள்ளதென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கொழும்பில் பெரும் செலவினங்களுக்கு மத்தியில் சார்க் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. சார்க் மாநாடு 20 வருடங்களாக நடைபெறுகிறது. ஆனால், இன்றுவரை ஆசிய நாடுகளுக்குள் மக்கள் சென்று வரக்கூடிய திறந்த விசா வசதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சார்க் நாடுகளில் மேற்கொள்ளப்படும் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றினால் போதாது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உறுதியளித்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். 1987 ஆம் ஆண்டு இத்திட்டத்தை எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசு முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தை சிறுபான்மை மக்களும் தமிழ்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் அதனை ஒருபோதும் ஐ.தே.க. எதிர்க்காது.

சிறுபான்மை மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் அதனை விட குறைந்துவிடக்கூடாது. அவ்வாறு இருக்குமாகவிருந்தால் இந்நாட்டின் பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது.

சுதந்திரம் எமக்கு கிடைத்த போது இந்தியா போல் அதிகாரத்தை நாம் பரவலாக்கி இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாம் எதிர்ப்பதாக கூறுகின்றனர். அதுதவிர பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாம் மட்டுமல்ல சர்வதேசம் கூட எதிர்க்கவில்லை. ஆனால், பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பேரில் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கெதிரான நடவடிக்கைகளையே நாம் எதிர்க்கின்றோம்.

நாம் யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்தபோது கூட விமானங்களிலிருந்து துண்டுப் பிரசுரங்களை போட்டு மக்களை வெளியேற்றிய பின்னரே நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

17 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல், பொலிஸ் ஆணைக்குழுக்கள் இந்த நாட்டிற்கு தேவை.

கிழக்கு தேர்தல் எவ்வாறு நடந்ததென்பது அனைவருக்கும் தெரியும். இதனால், தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைக்கூட இந்தியப் பிரதமர் சந்திக்க மறுத்தார். பிள்ளையான் நேர்மையான முறையில் தெரிவு செய்யப்படவில்லையென்பதே இந்தியாவின் கணிப்பு.

அமெரிக்கா கூட ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. கிழக்கில் தற்போது ஆயுத அரசியலே நடைபெறுகிறது.

கண்ணுக்கெதிரே தெரியும் படுமோசமான மனித உரிமைகளைக் கூட இந்த அரசு கண்ணை மூடிக்கொண்டு அப்படி எதுவும் நடக்கவில்லையெனக் கூறுகின்றது. ஆனால், இதனை நம்ப சர்வதேச சமூகம் தயாராயில்லை.

எமக்கு தனித்து வாழ முடியாது. சர்வதேசத்துடன் கைகோர்த்துத்தான் வாழமுடியும். அதற்கு தேவையான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதற்கு அரசு தயாரில்லை.

மாறாக இவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முனையும் எங்களை அச்சுறுத்துகிறார்கள். அடிபணிய வைக்கப் பார்க்கின்றனர். ஊடகங்களை மிரட்டுகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது.

அரசியலமைப்பு சபை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் முதல் பிரதிவாதியாக ஜனாதிபதியின் பெயரே இடம்பெற்றுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அதற்கு ஜனாதிபதி கூட விதிவிலக்கல்லவெனக் கூறிய பிரதம நீதியரசரை நாம் பாராட்டுகின்றோம்.

இந்த சட்டத்தினூடாகவே நாம் பிரச்சினைகளை தீர்க்க முற்பட வேண்டும்.