அரசு மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது : ஐ.தே.க

காலங்கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைகளை மூடி மறைப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சுகாதார அமைச்சரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா முயற்சி செய்து வருகிறார். பிரபாகரனையும், யுத்தத்தையும் காட்டி அரசாங்கம் மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது என்று ஐ.தே. கட்சி குற்றம் சாட்டுகிறது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே. கட்சி எம்.பி டாக்டர் ஜயலத் ஜயவர்தன இக்குற்றச்சாட்டை சுமத்தினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது, நாராஹேன்பிட்டி இரத்த வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் ஐ.தே. கட்சி விடயங்களை முன்வைத்தது. இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தது. திருடர்களை கையும் மெய்யுமாக பிடித்துக் கொடுத்தும் சுகாதார அமைச்சர் விசாரணைகளை மேற்கொள்ளாது மௌனம் காக்கிறார். இரத்த வங்கியின் பணிப்பாளரையும், பிரதான டாக்டரையும் சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். அத்தோடு களஞ்சியசாலை ஊழியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட பெரிய பெரிய மீன்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள சுகாதார அமைச்சர், நெத்தலி மீன்களுக்கு தண்டனை வழங்கியுள்ளார். இவையெல்லாம் வெறும் கண் துடைப்பு. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு ஐ.தே. கட்சி ஒரு போதும் இடமளிக்காது. மக்களின் இரத்தத்துடன் அரசாங்கம் விளையாடுகிறது. அதுமட்டுமல்ல அர்ப்பணிப்புடன் எமது நாட்டு மக்கள் இரத்ததானம் செய்கின்றனர். இதனை மலினப்படுத்த சுகாதார அமைச்சர் முயற்சிக்கின்றார். அரசாங்க வைத்தியசாலை களஞ்சியங்களில் காலம் கடந்த மருந்து வகைகள் இருப்பது இயல்பானதாகும். அதேபோன்று தான் காலம் கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகளும் இருந்துள்ளன என்ற பிழையான கருத்தை மக்கள் மத்தியில் முன்வைக்க முயற்சிக்கப்படுகிறது. ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படும் போது சுத்திகரிப்பு உறையானது புதியதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். அதன் போதே நோயாளர் பாதுகாக்கப்படுவார். இவ்வாறான காலம் கடந்த சுத்திகரிப்பு உறைகள் மூலம் இரத்தம் ஏற்றப்படுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைந்து தொற்று நோய்கள் ஏற்படும் அபாயகரமான நிலைமை ஏற்படும். உயிராபத்தும் ஏற்படும்.

இவ்வாறு காலம் கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகள் மூலம் பலருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. மிக விரைவில் ஆதாரங்களுடன் இவற்றை வெளியிடுவோம். இப்பிரச்சினை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பக்க கடிதம் ஒரு பக்கமாக குறைக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்த வேண்டும். ஆனால் இன்றைய பொலிஸாரின் நடவடிக்கைகளை பார்த்தால் நியாயமான விசாரணைகள் இடம்பெறுமென்பதில் நம்பிக்கையில்லை.

யுத்தத்தை காட்டி மக்களின் இரத்தத்துடன் விளையாடுவதை அரசாங்கம் கைவிட வேண்டும். இப்பிரச்சினையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோரை விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.