அரசு – புலிகள் இரகசியப் பேச்சின் இறுவெட்டு தயா மாஸ்ரரிடம் இருப்பதாலேயே அவருக்குப் பாதுகாப்பு!:ரணில் விக்கிரமசிங்க

   maki1011அரசுக்கும்  புலிகளுக்குமிடையில் 2006 இல் வன்னியில் இடம்பெற்ற இரகசியப் பேச்சு தொடர்பான இறுவெட்டு (சீ.டி.) ஒன்று தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரிடம் உள்ளது என்றும் அதை அவர்கள் பகிரங்கப்படுத்தி விடுவர் என்ற அச்சத்தினாலேயே அரசு அவர்களை இதுவரையும் பாதுகாக்கின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை  கெக்கனதுறையில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

நான் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு அவர்களுக்கு வடக்கு  கிழக்கை கொடுத்தேன் என்று மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டுகின்றார். நான் அவ்வாறு செய்யவில்லை.  நான் செய்தது யுத்தநிறுத்த ஒப்பந்தம் மாத்திரம்தான். நான் செய்த யுத்தநிறுத்த ஒப்பந்தம் பிழையானது என்றால் மஹிந்த ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் அந்த ஒப்பந்தத்தைக் கிழித்து வீசவில்லை? அவர் நான் செய்த ஒப்பந்தத்தைப் பாதுகாத்துக்கொண்டு புலிகளுடன் பல தடவைகள் பேச்சு நடத்தினார். 2006 இல் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் வன்னிக்குச் சென்று புலிகளுடன் மிக இரகசியமாக பேச்சு ஒன்றை நடத்தினார்.

அந்தப் பேச்சு தொடர்பான விவரங்கள் அடங்கிய இறுவெட்டு (சீ.டி.) ஒன்று தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரிடம் உள்ளது. அந்த சீடியைப் பகிரங்கப்படுத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். அதைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி அவர்கள்  இருவரையும் பாதுகாத்து வைத்துள்ளார்.  அந்த இரகசிய பேச்சை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்குமாறு நாம் அரசிடம் கோருகின்றோம்  என்றார்.