அரசு கிழக்கு மாகாணத்தை ஆயுதக் குழுவிடம் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது!:ஜே.வி.பி. கூறுகிறது .

கிழக்கு மாகாணத்தை ஆயுதக் குழுவிடம் தாரை வார்த்துக் கொடுத்துள்ள இந்த அரசு கிழக்கில் ஜனநாயகம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி வருகிறது என தெரணியகலை பிரதேச சபை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர் சமரசிங்க கூறினார்.

சபையின் மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கிழக்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதாக அரசு கூறி வருகிறது. அங்கே ஆயுதக் குழு மாகாண சபையை நிர்வகிக்கிறது. அங்கே இடம்பெறும் சம்பவங்கள் முலம் ஜனநாயகம் எப்படி நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை நாடு அறியும் என்றார்.

தெரணியகலை பிரதேச சபைத் தலைவர் தமது உரையில் கூறியதாவது;

“இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் சகல உரிமைகளுடன் வாழ வேண்டும். தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதனை அறியாத மக்கள் விடுதலை முன்னணியினர் ஏதோ எல்லாம் கூறி மக்களைக் குழப்பி வருகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேசி வருகின்றனர்.

நாட்டை இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். எதிர்வரும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களும் வெற்றி பெறமாட்டார்கள்’ என்றார்.