அரசுதான் அமைதியை விரும்பவில்லை- கிஷன்ஜி

சுவாமி அக்னிவேஷ், மேதாபட்கர் போன்ற தன்னார்வக்குழுக்களின் மத்தியஸ்தம் மாவோயிஸ்டுகளுக்கு பல் வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசாத் கொல்லப்பட்ட பின்னர் இது கட்சிக்கும் பல் வேறு விவாதங்களைக் கிளப்பி விட சுவாமி அக்னிவேஷ் போன்ற தன்னார்வக் குழுக்களோடு தங்களுக்குள்ள தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது என்ற முடிவுக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ள நிலையில், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியை மத்தியஸ்தம் செய்பவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாவோயிஸ்டுகளின் தலைவர் கிஷன்ஜி கூறியதாவது: வன்முறையைக் கைவிடுமாறு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தங்களது சுதந்திர தின உரையின்போது கேட்டுக்கொண்டனர். வன்முறையை நாங்கள் விரும்பவில்லை. மாவோயிஸ்ட் செய்தித்தொடர்பாளர் ஆஸாத் பேச்சுவார்த்தைக்குத் தயார்நிலையில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுபோன்ற செயல்கள் மூலம் அரசுதான் அமைதியை விரும்பவில்லை எனத் தெரிகிறது. மத்தியஸ்தம் செய்பவராக செயல்படுமாறு மமதா பானர்ஜியை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இதற்கு ஒப்புக்கொண்டால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு கிஷன்ஜி கூறினார். ஆஸாத் கொல்லப்பட்டது குறித்து லால்கரில் நடைபெற்ற பேரணியின்போது கேள்வி எழுப்பிய மமதா, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கிஷன்ஜியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.