அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் கணவரைக் கடத்தியிருக்கலாம் : சந்தியா எக்னலிகொட

 அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களே தனது கணவரை கடத்தியிருக்கலாம் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 24ஆம் திகதி முதல் ஊடகவியலாளர் எக்னலிகொட வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் பின்னர் காணாமல் போன எக்னலிகொடவை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஊடகவியலார்கள், சமூக அமைப்புக்களைச் சார்ந்தோர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுவரை அவர் தொடர்பான செய்திகள் வெளிவராத நிலையிலேயே சந்தியா எக்னலிகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எக்னலிகொட காணாமல் போனமைக் குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சிறந்த சித்திரக் கலைஞரான பிரகீத் எக்னலிகொட தான் வரைந்த கேலிச் சித்திரங்களைக் கொண்ட கண்காட்சியொன்றை இவ்வருடம் நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ___