அரசியலில் குடும்ப ஆதிக்கமும் அண்டிப்பிழைப்போரின் போக்கும்!

 
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஏற்கெனவே நடந்து முடிந்த மாகாணசபைகளின் தேர்தல்களிலும் அரசாங்கத்தரப்பு அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டியிட அனுமதிக்கப்பட்டமை குறித்து நேற்று முன்தினம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடமும் மைத்திரிபால சிறிசேனவிடமும் கருத்துக் கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில் அரசியலில் குறிப்பிட்ட சில குடும்பங்களின் ஆதிக்கம் என்பது இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோருக்கு எந்தளவுக்கு ஏற்புடையதாக இருக்கிறது அல்லது ஏற்புடையதாகச் செய்யப்பட்டிருக்கிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதென்பது தேர்தலொன்றில் போட்டியிடுவதற்கான தகுதியாகவோ அல்லது தகுதியீனமாகவோ இருக்கக் கூடாது என்றும் தங்களது உறவினர்களை அல்லது தங்களுக்கு விருப்பமானவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது அரசியல்வாதிகளின் ஜனநாயக உரிமை என்றும் இரு அமைச்சர்களும் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பிட்ட சில குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை இவர்கள் இருவரும் எதிர்க்கவில்லை. மாறாக, அரசியலில் குடும்பத்தவர்களுக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அரசியல்வாதிகள் சலுகை அளிக்கும் போக்கை “ஜனநாயக உரிமை’ என்ற திரையைப்பயன்படுத்தி இவர்கள் நியாயப்படுத்துவதற்குத் தயங்கவில்லை.தெற்காசிய சமூகங்கள் மத்தியில் அரசியலில் குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களின் ஆதிக்கம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்தியாவில் நேரு காந்தி குடும்பம், பாகிஸ்தானில் பூட்டோவின் குடும்பம், பங்களாதேஷில் ஷேய்க் முஜிவுர் ரஹ்மானின் குடும்பம் என்று அரசியல் ஆதிக்க குடும்பங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. முன்னாள் தலைவர்களின் மனைவிமார், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் கட்சித் தலைமைப்பதவிகளுக்கு வருவதும் அதைத் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதுமான “ஒரு பாரம்பரியம்’ முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று லோக்சபா உறுப்பினர்களாகியிருப்பவர்கள் மத்தியில் மதிப்பீடொன்றைச் செய்தால் முன்னைய எந்தவொரு லோக்சபாவிலும் தற்போதைய எண்ணிக்கையில் உறவினர்கள் இருந்ததில்லை என்பது தெரியவரும். மாநிலங்களின் அரசியலிலும் அதே நிலைமைதான். தமிழகத்தில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்துக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்புகள் முதுசமாக எழுதப்பட்ட ஒரு நிலைமையையே காண்கிறோம். தனது குடும்பத்தின் நலன்களுக்கு அப்பால் சிந்திக்க முடியாதவராக கருணாநிதி இருக்கும் ஒரு பரிதாபகர நிலைமையை அந்தமாநிலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான பழைய சட்டசபைக் காலத்தில் இருந்தே தொடருகிறது. டி.எஸ்.சேனநாயகா தலைமையிலான முதலாவது அமைச்சரவை 1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபோது அது பெருமளவுக்கு ஒரு குடும்ப ஒன்றுகூடல் போன்றே காட்சியளித்தது. அப்போது காலி தொகுதியின் லங்கா சமசமாஜக் கட்சி எம்.பி.யாக இருந்த டபிள்யூ. தகநாயகா ஐக்கிய தேசியக் கட்சியை மாமன் மருமகன் கட்சி என்றுதான் கிண்டல் செய்தார். டி.எஸ். சேனாநாயக?வின் மறைவுக்குப் பின்னர் மகன் டட்லி சேனாநாயகாவும் மருமகன் ஜோன் கொத்தலாவ?லயும் பிரதமர்களாகப்பதவி வகித்தனர். டட்லியின் மறைவையடுத்து ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை ஜே.ஆர்.ஜெயவர்தன கைப்பற்றிய பிறகு சேனநாயகா குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் அஸ்தமித்துப் போனது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் அண்மைக்காலம் வரை அவரது குடும்பத்தின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பண்டாரநாயகாவின் மறைவுக்குப் பின்னர் மனைவியினதும் அடுத்து மகளினதும் தலைமையின் கீழ் இருந்த சுதந்திரக்கட்சி நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆதிக்கத்தில் வந்தது. இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயகா குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்து வந்த போதிலும், வேறுபல மேல் தட்டுவர்க்கக் குடும்பங்களும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தி வந்திருக்கின்றன. ஜனாதிபதி ராஜபக்ஷ ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னர் கட்சிக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் அவரது குடும்பத்தவர்களின் செல்வாக்கு ஊடுருவியிருக்கின்ற பாணியை நோக்கும் போது முன்னைய அரசியல் ஆதிக்கக் குடும்பங்கள் காட்டியிராத அதீத அதிகார முனைப்பொன்றைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் அண்மைக் காலவரலாற்றிலே முன்னென்றுமே பேசப்படாத அளவுக்கு இப்போது அரசியலில் குடும்ப ஆதிக்கம் குறித்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆட்சியதிகாரத் தலைமைத்துவம் அண்டிப் பிழைக்கும் அரசியல் வாதிகளினால் கூடுதலான அளவுக்கு தனிநபர் வழிபாட்டுக்குரியதாக மாற்றப்பட்டு வந்திருக்கிறது. அண்மையில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாடு பூராவும் காணப்படுகின்ற சுவரொட்டிகளும் பதாகைகளும் தற்போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளினால் ஊக்குவிக்கப்படுகின்ற தனிநபர் வழிபாட்டுப் போக்கின் தீவிரத்தை தெளிவாக உணர்த்துகின்றன. ஆட்சியாளர்கள் தங்களுக்கு நெருக்கமான குழுவினரை வைத்துக் கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதென்பது இன்று நேற்று ஆரம்பமான ஒரு போக்கு அல்ல. அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அது ஜனநாயக ஆட்சி முறைக்கு முற்றிலும் முரணானது. அதுவும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களே ஆட்சி நிருவாகத்தின் முக்கிய தீர்மானங்களை எடுக்கக் கூடிய பொறுப்புகளில் இருப்பது என்பது அதைவிட மோசமானதாகும். அடிமட்டத்தில் உள்ளூராட்சி நிருவாகங்களில் தொடங்கி மாகாண சபைகள் ஈறாக உச்சத்தில் மத்திய அரசாங்கம் வரை சகல மட்டங்களிலும் குறிப்பிட்ட சில அரசியல் குடும்பங்களின் உறுப்பினர்களும் உறவினர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் ஆதிக்கம் செலுத்தும் போக்கு இன்று தீவிரமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தங்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டு சொத்துகளைச் சேர்த்து சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் இத்தகைய விபரீதமான போக்கை உருட்டுப்பிரட்டுச் சொல்லி நியாயப்படுத்துகிறார்கள். அரசியலில் குறிப்பிட்ட சில குடும்பங்களின் ஆதிக்கமே ஊழல் மோசடிகளையும் முறைகேடுகளையும் இல்லாதொழிப்பதற்கு பிரதான முட்டுக் கட்டையாக இருக்கின்றது என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.

 ( Tamil Editorial  -Thinakkural)