அரசியலாக்கப்பட்ட வவுனியா பேருந்து நிலையப் பிரச்சனை!

கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்துச் சங்கத்தின் வடபிராந்திய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு காணப்பட்டபோதிலும், அவர்கள் இதுவரை போராட்டத்தைக் கைவிடவில்லை.

இச்சிக்கலை தீர்க்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடந்தது. இச்சந்திப்பில் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகளும் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தனர். தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தில், இலங்கை போக்குவரத்துச் சங்கத்தினருக்கு தனியாக இடம் ஒதுக்கித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பழைய பேருந்து தரிப்பிட வர்த்தகர்களுக்கு, அவர்கள் விரும்புமிடத்து புதிய பேருந்து நிலையத்தில் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்துதரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதற்கு தனியார் போக்குவரத்துச் சங்க ஊழியர்கள் இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அருகிலுள்ள காணியில் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கைப் போக்குவரத்துச் சங்க ஊழியர்கள் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடன் கொழும்பில் இலங்கை போக்குவரத்துச் சங்க அதிகாரிகளைச் சந்தித்து, போக்குவரத்துச் சங்க அமைச்சரை வவுனியாவுக்கு அழைத்துவந்து அவர் வழங்கும் தீர்வின் பின்னரே போராட்டத்தைக் கைவிடுவதாக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அத்துடன், புதிய பேருந்து நிலையத்தை பிரித்து தமது பிரதேசத்தைச் சுற்றி மதில் எழுப்பவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

இப்போராட்டத்தின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே செயற்படுவதாகவும், ஏற்கனவே விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே சுமந்திரன் இவ்வாறு செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு வழிகளில் அல்லலுறும் மக்களுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்க ஊழியர்களின் செயற்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply