அரசாங்கம் நாட்டிற்குள் சண்டித்தனத்தைகாட்டாது, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சண்டித்தனத்தை காட்ட வேண்டும்!:லக்ஸ்மன் கிரியல்ல.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுமாயின் அது குறித்து தக்க ஆதாரங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சர்வதேச சமுகத்தின் மத்தியில் வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் தவிர்த்து கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆசிரியர்களையும், வைத்தியர்களையும், நடிகர் நடிகைகளை அழைத்து  விரிவுரை நடத்தி, எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம்சுமத்துவதால் என்ன பலம் கிடைக்கப் போகிறது எனவும் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வியெழுப்பினார்.

நாட்டின் கௌரவம், சுயாதீனம், இறையாண்மை தொடர்பில் நாட்டிற்குள் சண்டித்தனத்தைகாட்டாது, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சண்டித்தனத்தை காட்ட வேண்டும். சர்வதேச, உள்ளுர் சூழ்ச்சிகள் குறித்து தொடர்ந்தும் பேசி வரும் அரசாங்கம், அந்த சூழ்ச்சிக் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதும், மேற்குல நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. விடுதலைப்புலிகளை தோற்கடித்து, இலங்கை பெற்ற வெற்றியினை மழுங்கடிக்க முயற்சிப்பதாக அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

அரசாங்கம் கூறுவது போல் இலங்கைக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சியொன்று இருக்குமாயின் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று அது குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அவ்வாறான சூழ்ச்சிகள் இருக்குமாயின் ஜனாதிபதி ஏன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திற்கு சென்று அந்த விடயங்களை ஏன் வெளியிடவில்லை.

உள்ளுர், சர்வதேச சூழ்ச்சிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதும் ஐரோப்பிய சமூகத்தின் மீதும் குற்றம்சுமத்தும் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று அது குறித்த தெளிவான அறிக்கையை வெளியிடம் சந்தர்ப்பத்தை ஏன் புறந்தள்ளினார்? நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெறுமாயின் அது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று தகவல்களை வெளியிடுவது அரச தலைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் உலகில் உள்ள நாடுகள் அங்கம் வகிப்பதால், இலங்கை குறித்து மேற்கொள்ளப்படுமு,சூழ்ச்சிக் குறித்து பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையே சிறந்த இடம். மனித உரிமை மீறல், போர் குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காரணங்களின் அடிப்படையாக வைத்து இலங்கைக்கு கிடைத்து வந்த வெளிநாட்டு உதவிகள் 86 வீதமாக குறைந்துள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று நாட்டின் நிலைமைகள் பற்றி சர்வதேசத்திற்கு தெளிவுப்படுத்தியிருக்கலாம். நாம் அனைவரும் நாட்டை நேசிக்கின்றோம் அதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் தேவை எமக்கில்லை. இதனடிப்படையில் எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலே ஊழல், மோசடி மற்றும் அடக்குமுறைகளை கொண்ட இந்த அரசாங்கத்தை நாம் கவிழ்ப்போம் எனவும் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.