அமெரிக்க போலந்து ஏவுகணை பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்!

22.08.2008.
வாரீஷோ: அமெரிக்க போலந்து ஏவுகணை பாதுகாப்பு உடன்படிக்கை ஐரோப்பாவிலும் அதற்கப்பாலும் புதியதொரு ஆயுதப் போட்டியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
இந் நடவடிக்கைக்கு இராஜதந்திர நடைமுறைகளினால் மட்டுமன்றி வேறு வழியிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகளை தடுக்கும் 10 ரொக்கெட் நிலைகளை போலந்தில் நிறுவுவதற்கான உடன்படிக்கையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைச்சாத்திட்ட சில மணிநேரங்களிலேயே ரஷ்யா இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் போன்ற எதிரி நாடுகளின் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாதுகாக்கும் பொருட்டே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் இப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவுகணை கண்காணிப்பு ராடர்களை செக் குடியரசில் நிறுவுவதற்கான உடன்படிக்கையில் அமெரிக்கா கடந்தவாரம் கைச்சாத்திட்டிருந்தது.

இவ் ஏவுகணை பாதுகாப்புக் கவசம் ரஷ்யாவை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதென தெரிவித்திருக்கும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு, இது தனது நலன்களுக்காக தந்திரோபாய மாற்றங்களை மேற்கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளில் ஒன்றெனவும் தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து வரும் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காகவே இத்திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறியிருப்பதை இது வெறும் கற்பனையென ரஷ்யா நிராகரித்துள்ளது.

ஆனால், அனைத்து தரப்பினரையும் கொண்ட ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவது தொடர்பான பேச்சுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தான் தயாராகி வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இவ் உடன்படிக்கை குறித்த பேச்சுகள் கடினமாக இருந்தபோதும் நட்புறவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால், அமெரிக்காவும் போலந்தும் மேலும் பல நன்மைகளைப் பெற முடியுமெனவும் போலந்து பிரதமர் பெனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ், 21 ஆம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா, போலந்து மற்றும் நேட்டோ நாடுகளுக்கு உதவுமெனவும் இப் பாதுகாப்பு முறைமை எவரையும் இலக்காகக் கொண்டதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.