அமெரிக்க புலனாய்வுத்துறையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள தலிபான்களின் புதிய வீடியோ!

  பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் பைதுல்லாஹ் மெசூத்தின் மரணத்திற்கு பழிவாங்கும் முகமாக அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களை நடத்துமாறு ஆப்கானில் சி.ஐ.ஏ. அதிகாரிகளை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி வீடியோக் காட்சியொன்றில் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வாரம் இத் தாக்குதலை நடத்தியவராகக் கருதப்படும் ஜோர்தானைச் சேர்ந்த ஹுமாம் காலிஅபுமுலால் அல்பலாவி என்பவர் இந்த வீடியோவில் இராணுவச் சீருடையில் தாடியுடன் தோன்றுவதுடன், பாகிஸ்தான் தலிபான் தலைவர் பைதுல்லாஹ் மெசூத் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாகத் தாக்குதல்களை நடத்துமாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கடந்த ஆகஸ்டில் பைதுல்லாஹ் மெசூத் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.பாகிஸ்தானின் எல்லைக்கருகிலுள்ள ஆப்கானின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அமெரிக்கப் படைமுகாமில் ஜோர்தானிய மருத்துவரெனக் கருதப்படும் பலாவி நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 சி.ஐ.ஏ. அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

சி.ஐ.ஏ.யின் வரலாற்றில் இது மிக மோசமான தாக்குதலெனக் கருதப்படுகிறது.மெசூத்தின் மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களை நடத்துவது மெசூத்தின் போராளிகளினது கடமையென பலாவி தெரிவித்துள்ளார்.இதேவேளை, பாகிஸ்தானின் தற்போதைய தலைவராக இருக்கும் ஹகிமுல்லா மெசூத்திற்கருகில் பலாவி உட்கார்ந்திருக்கும் வீடியோவொன்றையும் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளதுடன், அமெரிக்க, ஜோர்தானிய அரச இரகசியங்களை பலாவி போராளிகளுடன் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ் வீடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அது அமெரிக்க, ஜோர்தானிய புலனாய்வு சேவைகளுக்குக் கிடைத்த பாரிய பின்னடைவென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.இவ் வீடியோ எப்போது எங்கே பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவான போதும் இதில் ஹகிமுல்லா மெசூத்தின் பிரசன்னம் இது பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்பதை புலப்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.