அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்கிறார்.

அமெரிக்க அரசின் சார்பில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை ​(மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உலகம் முழுவதுமிருந்து 20 பெண் அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.​ அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில்,​​ மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்தும்,​​ பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் பேசுகிறார்.

3 thoughts on “அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்கிறார்.”

 1. துவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை….

  “என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்துவிட்டது”. துவரங்குறிச்சி சல்மா

  இன்று அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் , மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா யார்?

  “எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி” – என்று படிக்கின்ற யாரையும் ஒரு கணம் அதிர வைக்கும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சல்மா. ஒரு பெண் எழுத்தாளர் இதைமட்டுமே எழுதவேண்டும் என்று இருந்த எழுதப்படாத விதிகளை கதை,கவிதை, நாவல் என எல்லா தளங்களிலுமே உடைத்து எறிந்தவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் கவிஞர் சல்மா.

  இன்று திங்கள்கிழமை (மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை உலகம் முழுவதுமிருந்து அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் 20 பெண் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு” குறித்தும், “பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம்” குறித்தும் பேசும் கவிஞர் சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவியாகவும் (Chairperson of Ponnampatti Town panchayat) , தமிழ்நாடு சமூக நலவாரிய தலைவராகவும் (Chairperson of the Tamil Nadu Social Welfare Board) இருக்கிறார்.

  “எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்.”
  “பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்”
  “ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்
  பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது” – கவிஞர் சல்மா

  நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்று அன்று நினைத்த ஒன்பதாம் வகுப்பு மட்டும் படித்த சிறுமி ரொக்கையா பீவி (சல்மா) இன்று அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று செல்கிறார் என்றால் அவர் கண்ட சமுதாயமே காரணம். ஒவ்வொருவரும் வாழும் சமுதாய புறச்சூலல்களே அவர்களின் வாழ்க்கை பயணத்தை மாற்றியமைக்கிறது. நானும் இதே சல்மா பிறந்த திருச்சியில் கண்ட அனுபவமே இன்றுமட்டும் என்னை எனகேன்றொரு பாதையில் இழுத்து வருகிறது.

  இவரின் ஆரம்ப வாழ்க்கையைப் பார்ப்போமென்றால், ‘‘திருச்சியில் மிகவும் பின்தங்கிய, படிப்பறிவில்லாத சிறிய கிராமம் துவரங்குறிச்சி. அங்கே, சாதரான இஸ்லாமியக் குடும்பத்தில் இவர் பிறந்தார். அவ்வூரில் அதிகபட்சம் பத்தாவது படிப்பதே அபூர்வம், ‘சமைப்பது, துவைப்பது, குழந்தை பெறுவது’ என்று பெண்களுடைய வாழ்க்கை மிகவும் குறுகியது. ரொக்கையா பீவி (சல்மா) மட்டும் நிறைய கனவுகளுடன் வளர்ந்தார், காரணம்? புத்தகங்கள். இவருக்கு மிகவும் பிடித்தது மாயாஜாலக் கதைகள்தான். அவற்றில் இருந்த அதீத கனவுத்தன்மை இவரை வசீகரித்துக்கொண்டே இருந்தது. ‘இரும்புக்கை மாயாவி’தான் இவரின் ஹீரோ. விக்கிரமாதித்தன், துப்பறியும் சாம்பு போன்றவர்களும் இவரைக் கவர்ந்தார்கள். காமிக்ஸ் வழியாக துப்பாக்கி ஏந்தியபடி குதிரைகளில் பயனிப்பது, கொள்ளையர்களை விரட்டியடிப்பது என்று கதைக்குள்ளாக சிறுமியாக வாழ்ந்துகொண்டிருந்தார். பின் இவர் ஆறாவது வகுப்பு படிக்கும்போது இவர்கள் வீட்டிற்கு ஆனந்தவிகடன், குமுதம், ராணி போன்ற சஞ்சிகைகள் எடுக்கத் தொடங்கியபின் மதனகாமராஜன் கதைகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளை வாசிக்க பாதை அமைத்துக் கொடுத்தது.

  இக்காலத்திலேயே பதினோரு வயதிலேயே தானும் “அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும், இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது” என்று முடிவு செய்தார். இன்று அது ஓர் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பாகவே நிறைவேறியுள்ளது.

  ஓர் பேட்டியில் தன இளமைப் பருவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது சொல்கிறார், “வயதுக்கு வந்த பெண்கள் சினிமாவுக்கு போக அனுமதி இல்லை. எங்க ஊர் பரணி தியேட்டரில் அப்போது முதல் முதலாக மேட்னி ஷோ ஆரம்பித்தார்கள். படம் ஆரம்பிக்கும் முன், ‘பழனி முருகனே…!’ என்கிற பக்தி பாடலைப் போடுவார்கள். படம் முடிந்து வெளியே வந்தால், ‘ரூப்புத் தெரா மஸ்தானா…’ என்கிற இந்திப்பாடல் ஒலிக்கும். இப்போதுகூட அந்தப் பாடலை கேட்டால், பழைய நினைவுகள் வந்துவிடும். ஒரு நாள், நானும் என் தோழிகள் மூவரும் லைப்ரரிக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு மேட்னி ஷோவுக்குப் போனோம். போனதும்தான் தெரிந்தது, அது ஒரு மலையாளப் படம்! பிரமிளா நடித்த ‘அவளோட ராவுகள்’ போட்டிருந்தார்கள். திடீரென குளியல் சீன் ஓட ஆரம்பித்ததும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘வெளியே போய்விடலாம்’ என்றால், கேட்டைப் பூட்டிவிட்டார்கள். வேறு வழியின்றி கண்ணை மூடிக்கொண்டு முழுப்படத்தையும் கேட்டுக்கொண்டிருந்தோம். பெண்கள் பகுதியில் நாங்கள் நான்கு பேர்தான். எல்லோரும் படம் பார்ப்பதை விட்டுவிட்டு எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்”.

  “படம் முடிந்தது. ‘எல்லா ஆண்களும் வெளியேறட்டும்’ என்று அரைமணி நேரம் காத்திருந்தோம். தாவனியை இழுத்து, முக்காடு போர்த்திக்கொண்டு வெளியே வந்தால்…! ‘என்ன ஆயிற்று தெரியுமா? ஒருத்தன்கூட வீட்டுக்குப் போகவில்லை. அத்தனை பேரும் எங்களுக்காகவே வாசலில் காத்திருந்தார்கள். அவமானத்தில் ‘செத்தே போய்விடலாம்’ என்றிருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள், ‘ஏ& படம்’ பார்த்த செய்தி முந்திக்கொண்டுவிட்டது. அவ்வளவுதான்! அடுத்தநாள் முதல் நால்வரின் பள்ளி வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்”.

  “முற்றுப்புள்ளிக்குப் பிறகான எனது வாழ்க்கை, குகைக்குள் புதைந்த மாதிரி ஆயிற்று. அதை நினைத்துப் பார்ப்பதையே நான் வெறுக்கிறேன். அவ்வளவு கொடூரமான ஒரு வாழ்க்கை அது. பதிமூன்று வயதில் பெரியவளாகிவிட்டேன். வீட்டைவிட்டு ஒரு நொடிகூட வெளியே வரக்கூடாது. எந்த ஆம்பிளையும் வீட்டுக்குள் வரக்கூடாது. காலிங் பெல் சத்தம் கேட்டதும், பெண்கள் எழுந்து ரூமுக்குள் சென்றுவிடவேண்டும். தந்தை மகள் உறவே ஆண்&பெண் அடிப்படையில் தீர்மாணிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் புத்தகங்கள் மட்டுமே எனக்குத் துனையாய் இருந்தன.’’ &ஆழ்ந்த பெருமூச்சுடன் லேசாகச் சிரிக்கிறார் சல்மா.

  ‘‘கொடுமையான இந்த வாழ்க்கையை நான் அறிந்தே இருந்தேன். ‘பள்ளிக்கூடம்தான் போக முடியவில்லை, கரஸ்பான்டென்சிலாவது படிக்கலாம்’ என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ‘தபால் மூலம் படிப்பதென்றால் முதலில் ஸ்கூலுக்குப் போய் டி.சி. வாங்கணும். ஸ்கூலுக்குப் போனால் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். ஒரு பொண்ணை எப்படி வெளியூருக்கு அனுப்பலாம்? என்று அசிங்கமாகப் பேசுவார்கள்’ என்றார் அம்மா. இப்படி நமக்காக என்றில்லாமல், ஊருக்காகவே எல்லோரும் வாழ்ந்தார்கள். இன்றைக்கும் ஊருக்குள் கார் வந்து நின்றால், ‘உள்ளே யார் இருக்கிறார்கள்?’ என்று எட்டிப் பார்க்கும் அளவுக்கு தனிமனிதச் சுதந்திரம் அனுமதிக்கப்படாத பூமியாகவே இருக்கிறது துவறங்குறிச்சி”.

  “இந்தச் சூழ்நிலையில்தான், வீட்டுக்குள் இருந்தபடியே என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து, ‘இருளின் முதுகை ஒடித்துக்கொண்டு சூரியனாய் வெளியே வா!’ என்பது மாதிரி கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் வாசிப்புத் தளம் விரிவடைய ஆரம்பித்தது. லைப்ரரியன் மூலமாக தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பாரதியார் போன்றவர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். ரஷ்ய இலக்கியங்கள் கிடைத்தது”.

  “புத்தகங்கள் வழியாக உலகைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தொலைக்காட்சியின் வருகை வியப்பை ஏற்படுத்தியது. வாழ்க்கையை அதனோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்கும் பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள் ஆகியோர் எனக்குள்ளிருந்த வேகத்தை கூட்டினார்கள். ‘இவ்வளவு பெரிய உலகமா?’ ஏக்கமும், தனிமையும் என்னை வாட்ட ஆரம்பித்தது. கம்யூனிஸ தத்துவங்களும், பெரியாருடைய எழுத்துக்களும் என்னை தீவிரமானவளாக மாற்றியது. சட்டென்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். மூன்று வேளையும் எனக்கு நல்ல சாப்பாடு கிடைத்துக்கொண்டிருந்தபோது, ஐந்து ரூபாய் கூலிக்காக, தலித் பெண்கள் என் வீட்டில் கடலை உடைத்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு கோபம் தலைக்கேறியது. நான் கடவுள் நம்பிக்கையை கைவிட ஆரம்பித்தேன்”.

  “குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணும் மாமியார் குடும்பத்துக்காக சமைத்துப் பழக வேண்டும் எனபது ஊர் நடைமுறை. ஒட்டுமொத்தப் பெண்களுடைய சக்தியும், சமைப்பதற்கும் துவைப்பதற்குமே செலவிடப்பட்டது. இதுவும் எரிச்சலை உண்டாக்கியது. ‘பொழுதன்னிக்கும் அடுப்படியில் வேகக்கூடிய வேலையை செய்யமாட்டேன்’ என்று எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். ‘பெண்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது? என்பதை எழுத்தாக மாற்ற முடிவெடுத்தேன். தொடர்ந்து கலில் கிப்ரான், விட்மன், டால்ஸ்டாய், தஸ்தோவ்ஸ்கி, கார்க்கி, செக்கோவ் ஆகியோரை வாசிக்கத் தொடங்கினேன். மொழி லாவகப்பட்டது. அப்போது, வீட்டைவிட்டு எப்படியாவது வெளியேறவேண்டும் என்ற ஆவல் பீரிட்டுக் கிளம்பியது”.

  “இதற்காக ஒரு தந்திரம் செய்தேன். சும்மாவாச்சும், ‘அம்மா… கால் வலிக்கிறது!’ என்று கதற ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் இளைஞர்கள் என்பதால் வீட்டுக்குள் வர அனுமதி இல்லை. பெண்களுக்கென்று சரவணன் என்கிற வயசான ஹோமியோபதி ஸ்பெஷலிஸ்ட் இருந்தார். சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்த சரவணன், கால் வலிக்கு ஊசி போட்டுவிட்டுக் கிளம்பினார். நான், ‘அய்யோ… வலி தாங்கலையே…!’ என்று மீண்டும் நாடகமாடினேன். துடித்துப்போன என் அம்மா, டாக்டரைப் பார்க்க மதுரை போகலாம் என்று முடிவு செய்தார். இதைத்தான் நான் எதிர் பார்த்தேன். எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல்! வயசுக்கு வந்த பெண்கள் டாக்டரிடம் போனால், ‘ஏதோ வியாதி போலிருக்கு!’ என்று ஊர்முழுக்க வதந்தி கிளம்பிவிடும். அசிங்கமாகப் பேசுவார்கள். அது கல்யாணத்தைப் பாதிக்கும். அப்படியானால், மதுரைக்கு எப்படிப் போவது…?”

  இப்படி தனது இளமையின் அனுபவத்தை ஓர் பாடமாக எடுத்த அன்றைய சிறுமி, இளம் பெண் ரொக்கையா பீவி இன்றைய கவிஜர் சல்மா தொண்ணூறுகளின் இறுதியில் எழுத தொடங்கி இன்று இவரது குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்(An Evening and Another Evening) (2000), பச்சை தேவதை (Green Angel) (2003) மற்றும் இரண்டாம் ஜாமங்களின் கதை (Midnight Tales, 2004).

  இவரைப் பேட்டி கண்ட ஒருவர் “இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கை தமிழகத்தைவிட இலங்கையில் அதிகமாக உள்ளதோ? என்று கேட்டதற்கு,
  “இலங்கையில் நம் ஊரில் இருப்பதைவிடத் தீவிரமாகவே உள்ளது. தாங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்திக்கொள்ள மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களது வாழ்க்கைநிலை. தமிழ் முஸ்லீம் என்ற அடையாளத்தை விரும்பியே வகுத்துக்கொள்கிறார்கள்”.
  “நான் தமிழனல்ல. முஸ்லீம். புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள்தான் போராடுகிறார்கள். நாங்கள் போராடவில்லை” என்பதை சிங்கள ராணுவத்திற்கும் அரசிற்கும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் புலிகளினால் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் தங்களைத் தனிச் சமூகமாகக் காட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். புலிகளின் மீதான வெறுப்பை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மத அடையாளத்தைக் காட்டிக்கொண்டு தங்களின் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இனப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும்போது ஃபுர்கா அணிந்து செல்லமாட்டார்களாம். ஆனால் இப்பாதெல்லாம் ஃபுர்கா அணியாமல் முஸ்லீம் பெண்கள் வெளியில் செல்வதே இல்லை. அதனால் தனி ஒரு இனமாகக் காட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும்போது எப்படியிருந்தாலும் வெளியில் வரும்போது முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் வருகிறார்கள். “தமிழர்களல்ல நாங்கள். முஸ்லீம்கள்” என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். “புலிகள்மீது எங்களுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. அவர்களிமிடருந்து தனித்து நிற்கவே விரும்புகிறோம்” என்பதே அவர்கள் நிலை”, என்றும்.

  “நான் அங்கு இருந்த சமயத்தில்கூட கிளிநொச்சியில் கலவரம் நடந்தது. அதைக்கூட உதாரணமாகக் காட்டி அவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்மை அவமானப்படுத்துகிறார்கள் என்று கோபமாகச் சொன்னார்கள். புலிகளின் தலைமை முஸ்லீம்களுடன் சமாதானத்தை விரும்பினாலும்கூட மாவட்டப் பிரதிநிதிகளின் முஸ்லீம் வெறுப்பு அதைச் சாதிக்கவிடாது என்றே பெரும்பான்மையோர் சொன்னார்கள். ஒரு சில விஷயங்களை அவர்கள் சொன்னபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது”. என்று பதிலளித்துளார்.

  மேலும் தமிழகத்திலுள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே என்னவிதமான வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்? என்று கேட்டதற்கு,
  “அங்குள்ளவர்கள் கலாச்சாரரீதியாக மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் எல்லாப் பெண்களுக்கும் ஒருவித மனத்தடையை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்கும்வரை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தைப் பார்க்க முடியவேயில்லை. முஸ்லீம் பெண்கள் இந்த அளவிற்குச் சுதந்திரமாக இருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உடைகளிலிருந்து பேசுவதுவரை நிறைய வித்தியாசத்தைப் பார்த்தேன். பெண்களுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கிறது. வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் அங்கு சாத்தியமாகி இருக்கிறது. தமிழகத்தில் அந்த அளவிற்கு இல்லை என்பதை உணர்ந்தேன்”, என்று தெரிவித்துள்ளார்.

  இன்று இவரை இதுவரை எழுதத் தூண்டியது, இவரின் சிறுவயதில் வயதில் நடந்த பல்வேறு விஷயங்கள் இவரின் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்திருக்கன. இந்த விஷயங்களை நாம் தாம் ஏன் எழுதக்கூடாது என்று நினைத்திருக்கிறார், சிறுகதையாக எழுதி முடிக்க முடியாது, மனதில் பதிந்த விஷயங்கள் எல்லாமே பெண்கள் சார்ந்த விஷயங்கள். இந

 2. பெண்கலை பாடுபவர்களாகவும்,ஆடுபவர்களாகவுமே இன்னும் நாம் பார்க்கிறோம்.பூப்புனித விழா பெண்னை தனிப்பிறவியாக காட்டும் சடங்கு.இந்திய இராணூவ காலத்தில் புலிகளீடம் சுதந்திர பறவைகள் என்ற அமைப்பு இருந்தது ஆனாலும் அவர்கள் தானே ரஜனி திராணகம வைக் கொன்றார்கள். சல்மா போன்றோர் சுதந்திரமாக பேச மட்டும் அல்ல,அரசியலிலும் ஈடுபட முடிகிறது, ஆனால் அடையாளம் தெரியாமல் கொல்லப்பட்ட நமது பெண் குழந்தைகள் தலைமைக்காக பலி கொடுக்கப்பட்டவர்கலே. ஆளூமையும்,ஆற்றலும் அழிக்கப்பட்டு மண்ணோடு புதைக்கப்பட்ட அவர்கள் ஆன்மாக்கள் இப்போது பேசுவதற்காக் ஏங்கலாம்.

 3. பெண் அடிமையை தகர்த்து எறிய வந்த எழுத்தளார். பள்ளி பருவத்தில் கலவாடிதனமாக திரை அரங்கு சென்றது தவறு எதும் இல்லை.. தனது சுய சரித்திரத்தை எழுதி அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.. இவரை யாரு இஸ்லாமிய மததில் இருப்பதக சொல்லுகிறார்கள் ஏன் இவேரே கூட இதுவரை சொல்லவில்லையே நான் இஸ்லமிய மத கோட்பாட்டில் வாழ்கிறேன் என்று.. அவரது இள்மை வாழ்க்கையின் குறிப்புகள் அவரது இந்த சமுதாயத்தை பாதிப்புக்குள்ளாக்கி இருப்பது என்பது 100% உண்மை.. இன்று உலகில் எந்த ஒருநிலையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களாக கருதுவது இல்லை காரணம் அவர்கள் எல்லாநிலையிலும் வெற்றி பெற்ற்வர்களாக உலா வருகிறார்கள்.. அவரது கவிதயினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு இன்று ஒரு பெண் தனது இல்லற வாழ்வை இழந்து தனுது சுய முகவரி இழ்ந்து வாழ்கிறாள் என்றால் இவரது கவிதை சமுதாயத்தில் பெண்களிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கும். ஒரு முறை கூட படிக்க புடிக்காத ஒரு சுய சரித்திரததை கவிதை என்று அரசியல் ஆதயம் தேடிக்கொள்கிறார்..சமுதாத்தில் பெண்களை கொச்சை படுத்தவே இவர்களை போன்றவர்கள் சிலர் வலம் வருவது பெண்னினத்திற்க்குறிய பெருமையை ஒருகாலமும் சேர்க்க போவது இல்லை….

Comments are closed.