அப்காஸி ஊடாக முன்னேறும் ரஷ்யப் படைகள்.

11.08.2008.
ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காஸி பகுதியூடாக ரஷ்யப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் படைநடப்புச் செய்துள்ளதாகவும், மேற்குப் புற நகரான செனெகி நோக்கி முன்னேறியிருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற மற்றுமொரு பகுதியான தெற்கு அசட்டியா மீது புதிய தாக்குதல்களை நடத்தும் நோக்குடன், ஜோர்ஜியப் படைகள் மீண்டும் அணிதிரள்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள ஜோர்ஜியப் படைகள் தமது ஆயுதங்களை கைவிட வேண்டும் அல்லது ரஷ்யத் தாக்குதலை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று ரஷ்ய இராணுவம் முன்னர் காலக்கெடு விதித்திருந்தது.

தெற்கு அசட்டியாவில் பெரும்பாலான இராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு.
————————————————————————————————-
ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு அசட்டியாவின் தலைநகரான ஸ்கின்வாலி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு, ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மெட்வெடேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால், எமது பிபிசியின் மாஸ்கோவுக்கான நிருபர் அனுப்பியுள்ள செய்தியில், ரஷ்யா மேலும் மேலும், துருப்புக்களையும் ஆயுதங்களையும் போர்முனைக்கு அனுப்பிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

இதனிடையே இராக்கில் பணியாற்றிவரும் ஜோர்ஜியத் துருப்புக்களை ஜோர்ஜியாவுக்கு திருப்பிக் கொண்டுசெல்வதில் அமெரிக்கா உதவியதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் பூட்டின் அமெரிக்கா மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜோர்ஜியா படையினரை கொண்டுசெல்ல தாம் உதவியதை அமெரிக்க இராணுவமும் உறுதிசெய்துள்ளது.
BBC