அதிகார விளையாட்டு : குட்டி ரேவதி

4050அதிகாரம் என்பதன் பிரயோகம் பற்றிப் பல முனைகளிலிருந்து சிந்தித்து அதன் சூத்திரங்களைக் கண்டடைவதும் அதன் கணிப்புகளை அறிவதும் எனக்கு விளையாட்டோ விளையாட்டு. மனிதர்கள் தமது இயல்பான வாழ்க்கையில் கூட மெல்ல சுரக்கும் அதிகாரத்தைச் சிறுகச்சிறுகச் சேமித்து வைத்துக் கொண்டு மிக நெருக்கமான உறவுகளிடம் அதை ஆயுதமாக்கத் தயங்குவதில்லை.

சிங்களர்களுடனான ஈழமக்களின் அரசியல் போரைப் பொறுத்தவரை இதை ஓர் ஆரிய – திராவிடத்தின் தொடர்ந்த போரென்றும் அதிகாரத்தைத் தம் பக்கம் நிறுவுவதில் ஆரியர்களின் தந்திரங்களும் புரட்டுகளும் வரலாற்றில் நிரந்தரமானவை என்றும் தெளிவாக என்னால் அறியமுடிகிறது. இப்படி ஒற்றை வரியில் முடியும் தீர்வு அல்ல இது. என்றாலும் பிரச்சனையின் வேறு பக்கங்களையும் பார்க்க வேண்டிய விவாதத்தின் தொடக்கமே இக்கட்டுரை.

திராவிடம், தமிழ், தலித் என்று ஆரியத்திற்கு, சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களும் இயக்கங்களும் வேறு வேறு பொருள் கொண்டு காலத்திற்கேற்ற வடிவில் எழுந்துள்ளன. இந்தியா என்ற பூகோள எல்லையைக் கொண்ட வரலாற்றிலும் அரசியலிலும் கடந்த காலங்களில் எழுந்துள்ள போர்க்குரல்கள் எல்லாமே ஆரியர்கள் திராவிடர்கள் மீது செலுத்திய ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையே. கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டிலேயே வஜ்ரதந்தி என்பவர் திராவிடச் சங்கம் என்ற ஒன்றை நிறுவி சமூக நீதி பேணியுள்ளார். ஆரியர்கள் இம்மண்ணின் குடிமக்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் இயக்குவதற்கு அடிப்படையான, வசதியான சூத்திரங்களை உருவாக்கினர். அவை தாம் சாதிகள் என்ற இரும்புக் கழிகளால் கட்டப்பட்ட அதிகாரப் படியமைப்பு. இரண்டாயிர வருடப் போர்க்குரலுக்குப் பின்னும் சாதியின் குரலை நெரிக்க முடியாத அளவுக்கு தந்திரங்களும் படிமார்த்தங்களும் நிறைந்ததாகி இருக்கிறது ஆரியம். அவ்வழியாகவே சிங்களர்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்துவதும் திராவிடர்களின் மீதான வெறுப்பின் உக்கிரமே.

707இந்த காலங்காலமான ஆரியர்களின் வெறுப்பு தான் இராவணனை கொடுங்கோல் கதாபாத்திரமாக்கியது. திராவிடர்களைக் குரங்குகளாக்கியது. இராமனனை பதிவிரதனாகவும் தன் மனைவி சீதையின் புனிதம் பேண தீயேறச்சொல்லும் அதிகார ஆரியனாகவும் ஆக்கியது. இவையெல்லாம் நமது மூளையில் நிழல்களாய் படிந்தழுத்துவதற்காகப் பரப்பப்பட்ட ஆரியர்களின் கற்பனைகள். இந்நிலையில் எதிரியின் அதிகாரம் என்பது எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பதை அறியாமல் நாம் போரை நிகழ்த்துவதில் எந்தப் பொருளும் இல்லை.
இன்று வரை இந்தியாவை ஆள்வது ஆரியர்கள் தாம். இலங்கையை ஆள அதிகார வெறியுடன் இருக்கும் சிங்களவர்களும் ஆரியர்கள் தாம். ஒருவருக்கொருவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் உதவுவதற்கான காரணமும் இது தான். இவர்கள் இராணுவத்தை தாங்கள் அதிகாரம் செலுத்துவதற்கு வசதியாக வடிவமைத்துக் கொண்டுள்ளனர். இராணுவ ஆயுதங்கள் எல்லாமே இவர்களின் ஆதிக்கக் குழல்கள் வழியாக அதிகார விசையினால் இயக்கப்படுபவை.

இக்கட்டங்களில் நாட்டின் இறையாண்மை என்பதும் மக்களின் பாதுகாப்பு என்பதும் மக்கள் கண்ணில் மண் தூவ. மற்ற படி, வந்தேறிகளான ஆரியர்களின் அதிகார நிலையின்மை அவர்களின் உளவியலையும் மூளையும் பிடித்தாட்டுகிறது. (குடியேற்றமும் இடம்பெயர்தலும் இயல்பானது தான் என்றாலும் மண்ணைக் கைப்பற்றுவதற்காக இடம்பெயர்ந்தவர்கள் இந்த ஆரியர்கள்) அதற்குக் காரணம் அவர்கள் மரபணுக்களில் இன்னும் இந்த மண்ணும் அதன் ஏடுகளில் உருவாக்கி வைத்திருக்கும் இன்று வரையிலான வரலாறும் அவர்களுக்கு உரிமையானதில்லை என்னும் ஆதி நினைவுகள் அழியாமல் புரண்ட வண்ணமே இருக்கின்றன. அவர்களால் இந்த மண்ணில் அந்த நினைவுகளைக் களைந்து விட்டு ஓர் இரவும் தூங்க முடிவதில்லை. அதிகார வெறி அவர்களைத் தூக்கம் அற்றவர்களாக்கி விடுகிறது. அடுத்து எத்தகைய இராணுவ சக்தியை தரை இறக்கலாம் என்பதும் குருதியில் மக்களின் பொழுதுகளை நனைக்கும் வேட்கையும் அவர்களுக்குள் அணைவதே இல்லை. இன்று வரை மத்தியில் இந்தியாவை ஆண்டவர் எல்லோருமே ஈழ விஷயத்தில் ஒரு தலைப் பட்சமான கருத்தைக் கொண்டிருந்ததற்கும் இந்தத் தூக்கமின்மையே காரணம்.

திராவிடர்களின் அறிவு நுட்பத்தை எப்பொழுதும் தமது சூழ்ச்சித் திறங்களால் மட்டுமே வென்று வந்துள்ளார்கள் என்பதற்கு அவர்கள் இதிகாசங்கள் என்று சொல்லிவந்த இராமாயணமும் மகாபாரதமுமே சிறந்த உதாரணங்கள். இராமாயணம் அறங்களற்ற மயக்கங்களை மனிதனுக்கு ஊட்டுகிறது. மகாபாரதம் தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் மனிதனை மனிதன் வெல்லும் வழிகளைச் சொல்லுகிறது. என்றால் வெற்றி என்பது எவ்வளவு கெட்ட வார்த்தை பார்த்துக் கொள்ளுங்கள்! திராவிடனின் அறிவு நுட்பத்தை எதிர் கொள்ள முடியாத ஆரியர்கள், அது அவர்களுக்குத் தேவைப்படும்போது விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். தங்களால் அவ்வறிவு நுட்பத்தைச் சீரணிக்க முடியாத போது நேரடியான அல்லது மறைமுகமான சூழ்ச்சித் திறங்களால் அவர்களை உடல் உழைப்பைக் கோரும் நடவடிக்கைகளில் திணிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவர். அப்படித் தான் சிங்களனும் தூக்கமற்று துவக்குகளுடன் அலைகிறான். அந்நிலத்தில் வேறு வேறு அதிகாரத் திசைகளைக் கொண்டு இயங்கும் இனவாதமும் மதவாதமும் சமாதானத்தையும் போரற்ற நிலத்தையும் நிலையற்றதாக்குகிறது.

4504எல்லைக்குட்பட்ட அதிகாரம், அத்துமீறிய அதிகாரம், அதிகாரப் பூர்வமான அதிகாரம் எனப் பலவகை அதிகாரங்களூடே செயல்பட்டு வருகிறது ஆரிய ஆதிக்கம். சிங்கள அரசின் நடவடிக்கைகளை இவ்வகையான அதிகாரச் சமன்பாடுகளுடன் பொருத்திப் பார்க்கலாம். சிங்கள அரசு இராணுவம் வழியாக அதிகாரப் பூர்வமான அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டதும், அதிகாரப் பூர்வமானது என்ற அர்த்தத்தில் அவசியப்படும்போதெல்லாம் தமிழ் மக்கள் மீது ஏவி விடுவதும் ஆரியக் கலை. செஞ்சோலையில் ஆளுமைப் பயிற்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகளைக் கொன்ற போது சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் குழந்தைகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்குகிறது என்றும் அதை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் பழியை விடுதலைப் புலிகள் மீதே போடுவதும் இவ்வாறு விடுதலைப் புலிகள் சம்பந்தப் படாத விடயங்களிலும் தனது அத்து மீறிய அதிகாரத்தைப் பிரயோகித்துவிட்டு பொது மக்களே நம்பும் படியானதாகப் பழிகளை ஊடகங்கள் வழியாகவும் அறிக்கைகள் வழியாகவும் பரப்புவதும் என சிங்கள அரசே இச்சூழ்ச்சிகளை பலமுறைகள் செய்துவந்துள்ளது, அதிகாரத்தின் நேரடியான தாக்குதலில் இருப்பவர்களுக்குத் தெளிவாகும்.

அது மட்டுமன்றி, அதிகாரப் பெருக்கல் நடவடிக்கையில் சிங்கள அரசு பல வகையான தந்திரங்களைச் செய்து வந்திருக்கிறது. முதல் வழி, தன்னுடன் அணுக்கமாக இருப்பவரையே எதிரியாக ஆக்கிக் கொள்வதென்பது அதிகாரப் பெருக்கத்திற்கானதாகும். அடுத்து, எதிரியின் நண்பனை அவனுக்கே எதிரியாக்கி விட்டு அவனை வைத்து எதிரியைத் தாக்குவது தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதுடன் எதிரியின் நண்பன் இனி தனக்கு நண்பனாகிவிடுகிறான். மேலும் தனது நண்பர்களையே கூட அதிகாரம் கொடுத்து தனக்கு எதிரிகளாக்கிவிடுவது. இவ்வாறு எல்லா வகைகளிலும் சிங்கள அரசு தொடக்கத்திலிருந்தே தமிழினத்தை அதிகார விளையாட்டுகளால் கொன்றழித்திருக்கிறது.

ஆரியர்கள் தங்களிலும் உயர்ந்த அதிகார நிலைக்கு வேறெவரும் வந்துவிடாதவாறு தங்கள் போர்ச் சூத்திரங்களைக் கையாளத்தெரிந்தவர்கள். அவர்களுக்கு அவ்வாறான சூத்திரப் பாடம் பாலபாடமாகவே கற்றுக் கொடுக்கப்படுகிறது. ‘எதைச் செய்தேனும் அதிகார அம்புகளை உன் கையில் தக்க வைத்துக் கொள்’ என்பது வாழ்வுக்கான அடிப்படையாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. 4020சந்திரிகா, ரணில், மகிந்தா இவர்கள் எல்லோருக்குமே பொருளாதாரச் சுரண்டலுக்காக திராவிடர்களை- தமிழர்களை பயன்படுத்திக் கொண்ட பிறகு அவர்களின் இரத்தத்திலிருந்து உறிஞ்சுவதற்கு ஏதுமில்லை எனும் போது குழந்தைகள், பெண்கள் என எல்லோரையும் எந்த வித போர்க்குற்றங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அவர்களை பூண்டோடு அழிப்பது தான் கருதத் தகுந்த இராணுவ நடவடிக்கை. வாரிசுகளற்றுப் போகும்போது அம்மண்ணில் தமிழர்களின் வேரற்ற நிலையை உருவாக்கி விடலாம் என்ற கணிப்பிலும் தான்.

குறிப்பாக மேற்குறிப்பிட்ட மூவருமே அதிகாரத்தைக் தக்கவைத்துக் கொள்வதிலும் பெருக்கிக் கொள்வதிலும் கையாண்ட தந்திரங்களின் விளைவு தான் தமிழ் இனப் படுகொலையும் இனவெறுப்பும். இவர்கள் மூவருமே அதிகார நாற்காலிகளைச் சொந்தமாக்கிக் கொள்ள ஈழத் தமிழர்களின் கொன்றழித்த தலைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களின் அதிகார விளையாட்டின் களத்தில் தமிழர்களையும் பங்குபெறச் செய்து போரிடும் அறமோ விதியோ கூட அவசியப்பட்டதில்லை. ராஜதந்திரம், ரகசியக் காவல்துறை, ராணுவம், புலனாய்வுத்திட்டங்கள் போன்றவைதாம் அவர்களின் அதிகார நிகழ்ச்சி நிரல்களாக இருந்திருக்கின்றன. மருத்துவ மனைகள், குழந்தைகளின் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மீதெல்லாம் குண்டெறிவது தாம் அரசியல் நடவடிக்கைகளாக இருக்கின்றன.

ஒரு கட்டத்தில் பாரளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திரிகாவின் அரசு தொடர்ந்து சுட்டுக் கொன்றதிலிருந்தே அறிந்துகொள்ளலாம், விடுதலைப் புலிகள் மட்டுமே அவர்கள் எதிரிகள் அன்று என்பதை. அவர்களுடன் சமதையாக நின்று தேர்தலில் போட்டியிட்டு சிங்களருக்கே இணக்கமான அதிகார சமரசங்களையும் இசைவுகளையும் கொண்ட தமிழர்களையும் கூட அதிகார வட்டமான பாராளுமன்றத்தில் இடம் அமர்த்துவதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. கொன்றழித்தனர். ராஜதந்திரங்களைத் தொடர்ந்து கையாள்வது ஆரியர்களின் கடமையாகவும் அதை மறுத்தும் எதிர்த்தும் போரிடுவது திராவிடர்களின் பணியாகவும் ஆகிவிட்டது. இந்தியாவில் ஏற்கெனவே இம்மாதிரியான தந்திரங்களை விதைக்கத் தான் மகாபாரதத்தை மனனம் செய்யப் பணித்துவிட்டனர். அதாவது எதிரில் நிற்பவன் உன் சகோதரனாய் இருந்தாலும் கொல்வதும் வெல்வதும் உன் பணி என்பதை அவர்கள் கற்றவர்கள் என்பதால் தமிழர்கள் விஷயத்தில் சகோதரர்களாகக் கூடப் பார்க்கப் போவதில்லை.

311இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளுடனான இந்திய அரசின் அரசியல் நடவடிக்கையும் ஏறத்தாழ இதே சூத்திரங்கள் கொண்டது தான். மாவோயிஸ்டுகள் பழங்குடிமக்களுக்கான போராட்டத்தை ஆயுதங்களால் கையிலெடுத்துள்ளனர். சுதந்திரமடைந்து ஐம்பது வருடங்களாகியும் பழங்குடி மக்கள் எந்த அடிப்படை உரிமைகளும் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான எல்லா சலுகைகளும் காகிதங்களில் தாம் இருக்கின்றன. செயல்படுத்தப்படுவதில்லை. அரசு பணக்காரர்களுக்கு தரகர்களாக மாறிவிட்டதுடன் பழங்குடி மக்கள் தமது நம்பிக்கைகளாயும் வாழ்விடங்களாயும் கொண்டுள்ள காட்டையும் மலையையும் கவர்ந்து தொழிற்சாலைகள் தொடங்க விரும்பும் பணக்கார முதலாளிகளிடம் கொடுக்கிறது. இப்பொழுது நாட்டின் இறையாண்மை என்பதை எப்படி வரையறுப்பார்களாம்?

இந்தியாவைப் பொறுத்தவரை ஆரியர்களின் அதிகார இச்சை என்பது அயல்நாடுகளில் வதியும் ஆரிய பணக்காரர்களுக்கு நாட்டைத் துண்டாக்கித் தருவதும் இயன்றால் இருவருமே கூட்டாக நாட்டைப் பகிர்ந்து கொள்வதும் தான்.

தமிழகச் சூழலில் ‘சாதி மறுப்பும்’, ‘தமிழின ஒருமைக்கான கோரிக்கையும்’ நுண்ணிய தெளிவின்மையால் பிளவுபட்டுள்ளது கூட ஆரியர்களின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாக இருக்கிறது. இவை இரண்டுமே ஆரியர்களுக்கெதிரான இருப்பின் எதிர்ப்பின் அடையாளங்களாயும் திராவிடர்களின் அடையாளங்களாயும் காணும் தெளிவை தமிழக இயக்கவாதிகள் இழந்துவிட்டனர். ஆரியர்களின் பிளவுபடுத்தும் வேலைகளில் இதுவும் ஓர் இரை. பெரியார் – அண்ணா காலத் தமிழகத்தில் திராவிடம் என்பது மொழி வாரியான மாநிலப் பிரிவினையால் சிதைந்துவிட்டதாக எண்ணித்தாம் நாம் தமிழின அடையாளத்தை உறுதிப்படுத்தத் திரும்பினோம்.

231அந்தத் திராவிடமும் சனாதன பார்ப்பனியத்தினை எதிர்ப்பதற்காகவும் பகுத்தறிவைச் செழுமைப்படுத்தவும் எழுச்சி கண்டது. பெரியார் அதில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். சாதி ஒழிப்பு என்பதோ ஆரியர்களின் கண்டுபிடிப்பு; செயல்வடிவமைப்பு. இந்நிலையில் நாம் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். நம்மிடையேயான பிளவுகளைக் கூட நாம் தீர்மாணிப்பதில்லை. ஆரியன் தான் நிர்மாணிக்கிறான். உலகளவிலான தமிழரிடமிருந்து ஒரு திராவிடப் போர்மூளவேண்டும். அது ஆயுத வடிவங்களில் மட்டுமன்றி பல முனைகளிலிருந்தும் கிளர்ந்தெழ வேண்டும்.

5 thoughts on “அதிகார விளையாட்டு : குட்டி ரேவதி”

 1. ரேவதி கூறுவது போன்று ஈழத்தமிழர் பிரச்சனை வம்சம் (ஆரியர்-திராவிடர்) சார்ந்த பிரச்சனையாக இருந்தால் பெரியார் சிந்தனை தமிழ் நாட்டில் செல்வாக்கு பெற்ற அளவுக்கு ஏன் திராவிட வம்சம் சார்ந்த ஏனைய தென்னிந்திய மாநிலங்களில் (கேரளம் ஆந்திரா) அது செல்வாக்குப் பெறவில்லை?
  வர்க்கம் சார்ந்து இப் பிரச்சனையை எப்படி அணுகுகிறீர்கள்? – தேசியம் என்பதற்கே வயது 200 என்றுதானே அறியப்படுகிறது?

 2. சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையிலான மொழி பண்பாட்டு வேறுபாடுகள் தமிழருக்கும் பிற திராவிட மொழி பேசுவோருக்குமிடையிலானவற்றை விடச் சிறியன.

  சிங்களவர் ஆரியர் என்பதே ஒரு பொய்.
  சிங்களம் ஆரிய மொழி எனப்படுகிறது. எனினும் சமகாலச் சிங்களத்தின் மொழி அமைப்புத் தமிழுக்கே மிக நெருக்கமானது.
  இலங்கையில் 450 வருட கால ஐரோப்பிய ஆட்சி இருந்தது. அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே யவனர் அராபியர் சீனர் எனப் பலரும் வந்து போன மண் இலங்கை.

  து|ய இனம் என்று தென் ஆசியாவில் எதுவுமே கிடையாது.
  நாங்களே ஏற்படுத்திக் கொண்ட அடையாளங்களை வைத்து நம்மை நாமே போரிட்டு அழித்துக் கொள்கிறோம்.
  லாப மடைவோர் யார்?

 3. sinagalavars are thiravida race they are not ariya they may even tamils as i gues.cultreraly even lingusticaly i dont find any different between us.and similar culture we having.i dont know why on earth singal mentality became cruel against tamils. and the story like thutakaimunu and ellalan.

 4. periyar pondravargale sathi kodumai neega ariyargalai vimarsitha alavuku BC/MBC ivargalai vimarsika payanthar ennendral ariyargal tamil natil 1% or 2% matume anna bc/mbc 40% mel ulavargalai avar vimarsika en thayankinar

 5. சூக்குமத்தை தவிர பருண்மை பற்றி
  கவிதையிலும் சரி கட்டுரையிலும் சரி
  அறிந்திராத‌ குட்டி ரேவதி போன்ற
  பின்நவீனத்துவாதி என்று மட்டும்
  வரையறுத்துவிட‌ முடியாத ஒரு
  வகையினத்தை சேர்ந்தவர் தற்போது
  போரையும் அதற்கான காரணத்தையும்
  பற்றி எழுதியுள்ளார்.

  கட்டுரையின் கீழ் கண்ட பாராவில்
  அவர் சொல்லியிருப்பது தான்
  ஈழப்போருக்கான மைய்யமான‌ காரணம்!!

  //////சிங்களர்களுடனான ஈழமக்களின் அரசியல் போரைப் பொறுத்தவரை இதை ஓர் ஆரிய – திராவிடத்தின் தொடர்ந்த போரென்றும் அதிகாரத்தைத் தம் பக்கம் நிறுவுவதில் ஆரியர்களின் தந்திரங்களும் புரட்டுகளும் வரலாற்றில் நிரந்தரமானவை என்றும் தெளிவாக என்னால் அறியமுடிகிறது.//////

  தமிழக‌த்தில் கிணற்றுத்தவளை
  மணப்பாண்மையிருக்கும் சில
  தமிழ் இனவாதிகளும் இந்த குட்டி ரேவதியை
  போலவே இந்த போருக்கான அடிப்படை
  ஆரிய திராவிட முரண்பாட்டில் இருக்கிறது
  என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

  நவீன சமூகத்தில் ஆரியம் என்றும் திராவிடம்
  என்றும் பேசுவதையே முதலில் அறியாமை
  என்று தான் சொல்ல வேண்டும். வருண அமைப்பு
  இருந்த போது ஆரியம்‍ திராவிடம் என்று கூறியது
  சரி. நவீன காலத்தில் அது பார்ப்பனீயமாக‌
  இருப்பதை நவீன கவிதாயினி அறியாமல் போனது
  ஏனோ ??

  ////சாதி ஒழிப்பு என்பதோ ஆரியர்களின் கண்டுபிடிப்பு,செயல்வடிவமைப்பு./////

  கட்டுரையின் கடைசி பாராவிலிருகும்
  இந்த வரிக்கு என்ன பொருள் ??

Comments are closed.