அதிகாரப் பகிர்விற்கு எதிராக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூட்டணியொன்றை உருவாக்க முயற்சி!

 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஆலோசகர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

ranavakஇதுகுறித்து தேசிய சுதந்திர முன்னணியின் நந்தன குணதிலக உட்பட சிரேஸ் ட உறுப்பினர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய சுதந்திர முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான கமல் தேசப்பிரியவுடன் கடந்த வாரம் களுத்துறைப் பிரதேசத்தில் இதுகுறித்து பேசுவதற்காக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் ஜாதிக ஹெல  உறுமயவின் பிரசாரச் செயலாளர் நிசந்த ஸ்ரீவர்தணசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப காலத்தில் அந்தக் கட்சியின் ஆலோசகராகவும், பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றிய கமல் தேசப்பிரிய, விமல் வீரவங்சவுடன் ஏற்பட்ட உள்மோதல் காரணமாக கட்சிக்கு வெளியே இருந்து நந்தன குணதிலகவிற்கு தனித்து ஆதரவு வழங்கி வருகிறார்.

13வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தைப் பகிர்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக சம்பிக்க ரணவக்க இம்மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பீ. திஸாநாயக்கவைச் சந்திக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்டம்பர் 18ம் திகதி எஸ்.பீ.திஸாநாயக்கவின் பிறந்ததினத்தை முன்னிட்டு 10 புதிய நூல்களை வெளியிடும் பணியில் தற்போது எஸ்.பீ. ஈடுபட்டுள்ளதால், 18ம் திகதியின் பின்னர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ள இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.