அதிகரிக்கும் இந்திய முதலீடுகள் : வரவேற்கும் கருணா

ஜே வி பி மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான ஜே என் பி என்பன இந்தியாவின், கிழக்கு மாகாண முதலீடுகளை எதிர்த்துள்ள நிலையில்  கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளைத் தாம் வரவேற்பதாகக் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.    எனினும்  இந்தியாவின் கிழக்கு மாகாண முதலீடுகள்  இலங்கை மத்திய அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.  திருகோணமலையில் இந்தியா,  எண்ணெய் வயல், அணு உலை உட்பட்ட திட்டங்களுக்காக முதலீடுகளை மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவே கருணா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.  இதேவேளை, தமது அமைப்பில் உள்ள சுமார் 200 பேரை சிவில் பாதுகாப்புக் படையில் இணைத்துக் கொள்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகக் கருணா குறிப்பிட்டுள்ளார்.  இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களைத் தகுதிகளின் அடிப்படையில் காவல்துறையில் இணைத்து கொள்வதற்கான பேச்சுக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் நடத்தப்படும் என்றும் கருணா அறிவித்துள்ளார்.