அடை மழை : முகாம்களில் அவல நிலை அதிகரிக்கிறது.

Vavuniya_Flood300தற்போது பெய்துவருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள  மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், தூவானம் காரணமாகவும் கூடாரங்களில் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கல்விக்கூடங்கள், பொது மண்டபங்கள் என்பவற்றில் பொழுதைக் கழிக்க நேர்ந்துள்ளதாக அங்கிருந்து மீள்குடியேற்றத்திற்காக வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மழையென்றும் பாராமல் இரவோடு இரவாக மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குரிய மாவட்டங்களின் பொது இடங்களில் இறக்கி விடப்படுகி்ன்றனர். இதன்போது மழை காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூட்டை முடிச்சுகளுடன் வரும் இவர்கள் உரிய பயண முன்னேற்பாடுகள் இல்லாததனாலும், பலருக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் உரிய நேரத்தில் வரமுடியாதிருப்பதனாலும் சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்க வேண்டியிருப்பதாக முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.