அகதி முகாமில் இராணுவம் -பொதுமக்கள் கைகலப்பு , முகாமுக்குமிடையே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

vau001வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மோதல்கள் நடைபெற்றன. அதன் காரணமாக பொதுமக்கள் மூவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அகதி மக்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு விறகு எடுக்கச் சென்றபோதே அவர்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் உண்டாகின என்று சொல்லப்படுகின்றது. இந்த மோதல்களில் எட்டு வயதுச் சிறுமி ஒருத்தியும் மற்றும் இருவரும் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து செட்டிக்குளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

வவுனியா இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்குச் செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சில தகவல்கள் தெரிவித்தன. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்குச் செல்ல முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காகப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் இலங்கை அரசு அகதி முகாம் மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை நிறுத்திவிட்டததால், உலக உணவுத் திட்டத்தால் வழங்கபடும் உலர் உணவுகளை சமைக்கத் தேவைப்படும் விறகுகளை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து மற்ற முகாம்களுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இச்சம்பம் குறித்து   தெரிவித்ததாவது :

அகதி முகாம்களில் உள்ள மக்கள் தமக்கு உணவு சமைப்பதற்கென விறகு எடுப்பதற்காக அருவிலுள்ள முகாமுக்கு சென்ற வேளை படையினர் அவர்களைத் தடுத்தமையால், படையினருக்கும் முகாம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. மோதலினால் முகாம் மக்களில் மூவர் காயமடைந்ததனர். வவுனியா முகாம்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் சமைத்த உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து சமைத்த உணவு வழங்காது இனிமேல் மக்கள் தாங்களாகவே உணவு சமைத்துச் சாப்பிட வேண்டும் எனக்கூறி அரிசி, மா, சீனி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன. அங்குள்ள முகாம்களில் சுமார் 2 லட்சத்து ஐம்பத்தினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்குகின்றனர். அவர்கள் உணவு சமைப்பதற்கு விறகு தேவையாகவுள்ளது. அதைவிட மரக்கறி, உப்பு, புளி போன்ற பொருள்களை வாங்குவதற்கு அங்குள்ள 80 வீதத்திற்கும் மேற்பட்டோரிடம் கையில் பணம் இல்லை. இதனால் உணவு சமைக்க முடியாத நிலையும் காணப்படுகிறது.

தற்பொழுது மழையின்மையால் கூடாரங்களுக்கு வெளியே அடுப்பு மூட்டி சமைக்கிறார்கள். மழைகாலத்தில் முகாமுக்குள் அடுப்பு மூட்டவும் முடியாது, சமைக்கவும் முடியாது இதனால் சமைப்பதற்கு விறகு தேவைப்படுவதால் தான் அவர்கள் விறகு உள்ள முகாமை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சென்றவேளையிலேயே கைகலப்பு ஏற்பட்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தற்பொழுது இராமநாதன் முகாமுக்கும் ஆனந்தகுமாரசாமி முகாமுக்குமிடையே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர்; கூடியிருக்கிறார்கள்.

ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்தச் சம்பவத்தால் அச்சத்துடனும் பயப்பீதியுடனும் இருக்கிறார்கள்  என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.ஸிக்குத் தெரிவித்ததாவது:

அகதி முகாம் பகுதியில் மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை, சிலபேர் முதலாவது முகாமிலிருந்து இரண்டாவது முகாமுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது படையினர் அவர்களைத் தடுத்தனர். இதனால் அங்கு மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் படையினரை நோக்கிக் கற்களை வீசினர். எனவே படையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இருவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தற்பொழுது செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படையினரைத் தாக்குவதற்கு வந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் தற்பொழுது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது  என்றார்.