“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!

ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?

கடந்த மாதம் கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயன்ற 107 ஆண்கள், 19 பெண்கள், 25 குழந்தைகள் உள்ளிட்ட 151 ஈழத் தமிழர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுத் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். “30,40 பேர் மட்டுமே போகக்கூடிய அந்தச் சின்னப் படகில் 130 பேர் நெருக்கியடிச்சி நின்னுக்கிட்டிருந்தாங்க. ஆஸ்திரேலியாவுக்குப் போகணும்னா இப்படியே 15 நாள் பயணிச்சாகணும். 15 நாளும் அவங்க இப்படியே நின்னுகிட்டே போக முடியுமா? நாங்க மடக்காம இருந்திருந்தா அந்தப் படகு பாரம் தாங்காமல் நடுக்கடலில் மூழ்கிப் போயிருக்கும். எல்லோரும் ஜல சமாதியாகி இருப்பாங்க” என ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிப் போகவிருந்த ஈழத் தமிழர்களின் அவலத்தையும், அவர்கள் எதிர்கொண்டிருந்த பயங்கரத்தையும் ஒரு கேரள போலீசுக்காரர் பத்திரிகையாளர்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்குப் போக முடியாவிட்டாலும் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு செத்துப் போகாத தமது அதிருஷ்டத்தை நினைத்து அவர்களுள் ஒருவர்கூட மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. இலங்கையில் ராஜபட்சே அரசால் நடத்தப்படும் முள்வேலி முகாம்களுக்கும் தமிழகத்திலுள்ள ஈழ அகதி முகாம்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவுமில்லை என்ற பின்புலம்தான் ஈழத் தமிழ் அகதிகளைத் தமிழ்நாட்டை விட்டு கள்ளத் தோணியில் வெளியேற வைக்கிறது. தமிழக முகாம்களுக்குத் திரும்புவதைவிட, நடுக்கடலில் செத்துப் போயிருக்கலாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டுள்ளது.

2010 ஏப்ரல் மாதம் அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. இந்திய, தமிழக அரசுகள் ஈழ அகதிகளை வேண்டா விருந்தாளிகளாகத்தான் நடத்தி வருகின்றன என்பதை இம்முகாம்கள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமான நிலையில் இருப்பதிலிருந்தே புரிந்து கொண்டுவிடலாம். மேலும், இம்முகாம்கள் அனைத்தும் கியூ பிரிவு போலீசாரால் ஒரு அரை சிறைச்சாலை போலவே நடத்தப்படுகின்றன. போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் அத்துமீறலை, அக்கும்பல் தம்மைக் கேவலமாக நடத்துவதைக் கேள்வி கேட்கத் துணியும் ஈழத் தமிழர்களைப் புலிகள் என முத்திரை குத்தி, ஆயுள் தண்டனை கைதிகளைப் போல அடைத்து வைப்பதற்காகவே செங்கல்பட்டிலும் பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இரண்டு சிறைச்சாலைகள் நடத்தப்படுகின்றன.

“மாலை 6 மணிக்குள் முகாமிற்குத் திரும்பிவிட வேண்டும்; வெளியிலோ, வேறு முகாமிலோ தங்கியுள்ள தமது உறவினரைப் பார்க்கப் போக வேண்டுமென்றால் வட்டாட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்; வெளியே வேலை தேடச் செல்லுவதற்கு ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் என முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள் குற்றவாளிகளைப் போலவே தமிழக அரசால் நடத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இருபது ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்குச் சர்வதேசரீதியில் அங்கீகரிக் கப்பட்ட எந்தவொரு உரிமையும் வழங்க இந்திய அரசு மறுத்து வருகிறது. அகதி முகாம்களிலேயே பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பை முடித்த ஈழத் தமிழ் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேருவதற்கு இருந்துவந்த உரிமையும் பறிபோய்விட்டது.

ஆஸ்திரேலியாவுக்குப் போக முயன்று தோற்றுப் போய்த் திரும்பியிருக்கும் நாதன், “மரணத்துக்குக்கூட எங்கள் மீது இரக்கம் இல்லை; அதுகூட எங்களை அழைத்துக்கொள்ள மறுக்குது” என்று கதறுகிறார். ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் முடியாது என்று எல்லாப் புறமும் சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது? முள்ளிவாய்க்கால் என்றா?

நன்றி:– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

4 thoughts on ““அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!”

 1. As I stated before this needs the immediate attention of the United Nations High Commissioner for Refugees. State Government in Tamil Nadu have to create a separate department to handle the affairs of the Sri Lankan Tamils. Shri Pranab Mukerjee as Rashrapathi should spearhead this as he is the architect of the failed policy of the Indian Central Goverrnnent towards the Sri Lankan Tamils.

 2. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்கள்.

  அகதி அந்தஸ்து உலகத்தின் எந்தநாட்டில் எடுப்பது என்பதை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். இதுவும் ஒரு லொத்தர் மாதிரியே! குத்துவிளக்கும் கிடைக்கலாம். வெள்ளிசருவச் சட்டியும் கிடைக்கலாம். நாளைக்கு உடைந்து போகிற கிளாஸ்சும் கிடைக்கலாம்.

  இந்தியாவுக்கு அகதியாகி போனவர்கள் ஆறுதல் பரிசு கிடைத்த கிளாஸ்மாதிரி.

  முதல்பரிசு குத்துவிளக்கு கிடைத்தவர்களாலேயே நீண்டகாலம் ஈழம்பற்றி எரிந்தது என்பதையும் மறக்க முடியாது.

  1. ஐயா சோசலிசம் பேசிக்கொண்டு கியூபாவுக்கோ வட கொரியாவுக்கோ போகாம முதலாழித்துவநாட்டுக்கு போயிரிந்துகொண்டுநியாயம் பேசுறார்.

 3. Chandran. Raja. you said it right. Things are going to over take the capacity of the governrnent of Sri Lanka internally and internationally. Roopan, Sri Lankan Tamils gave a special touch to socialism. That guy empowered all the other castes. He gave them Chinese made automatic rifles bought through North Korea.

Comments are closed.