அகதிகள் சிறைமுகாமைப் பார்வையிட ஐ.நா விற்கு பிரித்தானியா தடை:உரிமை அமைப்புக்கள்

பெட்போர்ட் சயரில் அமைந்துள்ள யார்ள்வூட் முகாமின் உள்ளே
பெட்போர்ட் சயரில் அமைந்துள்ள யார்ள்வூட் முகாமின் உள்ளே

குடியேறிகளை அகற்றும் யார்ள் வூட் மையம் என்பது பிரித்தானியாவில் பிரபலமான தடுப்பு முகாம். சட்டவிரோதக் குடியேறிகள் என பிரித்தானிய அரசு கருதுவோரையும் அரசியல் தஞ்சம் நிராகாரிக்கப்பட்ட அகதிகளையும் பிரித்தானிய அரசு அந்த முகாமில் அடைத்துவைத்து சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கும். இந்த முகாமில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உட்பட பல்வேறு வன்முறைகளைப் பலர் பதிவு செய்தனர்.

இந்தச் சிறை தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்படுகிறது. அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்ட பெண்களில் எழுபது வீதமானவர்கள், தாம் மிகக் கேவலமாக நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர்.

முகாமிற்கு எதிரான பிரச்சாரக் குழு ஒன்று பிரித்தானியாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
உரிமை அமைப்புக்கள் பல இந்தத் தடுப்பு முகாம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளன. ஜேடி சிமித் என்ற பிரித்தானிய எழுத்தாளர் முகாமிற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். ‘சுந்தந்திரத்திற்கு எதிரான குற்றம்’, ‘நாகரீகமுள்ள எந்த நாட்டிற்கும் இது அவமானச் சின்னம்’ என்றெல்லாம் அந்த எழுத்தாளர் தடுப்பு முகாம் குறித்துக் கூறியுள்ளார். பல ஈழத் தமிழர்களும் இந்த முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சிறப்புப் பதிவாளரான ரஷீதா மஞ்சூ கடந்தவாரம் பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இவர் இந்தச் சிறை முகாமைப் பார்வையிட விருப்பம் தெரிவித்த போதும் பிரித்தனிய அரசு அவர் அங்கு செல்லத் தடைவிதித்தது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு முன்பே யார்ள் வூட் முகாமைப் பார்வையிட்டு பெண்கள் மீதான வன்முறைகளைப் பதிவிசெய்வது தனது பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டிருந்த போதும், பிரித்தானியாவில் தங்கியிருந்த ஒருவார காலத்துள் சிறை முகாமைப் பார்வையிட அனுமதிக்காமையினால் அங்கு செல்லவில்லை என உரிமை அமைப்புக்கள் மேலும் குற்றம் சுமத்தின.
மஞ்ஜூ யார்ள் வூட் முகாமைப் பார்வையிடுவதற்கான அனுமதியை எப்போதுமே வழங்கவில்லை என்பதை பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.